Monday, March 27, 2017

இலக்கிய அடியாள்: செயமோகன்

சினிமாவில் டாக்டராக நடிப்பவரைப் பார்த்து "நீ டாக்டருக்கு படித்துள்ளாயா? என்ன தகுதியின் அடிப்படையில் டாக்டராக நடிக்கிறாய்?" என்று யாரும் கேட்பது இல்லை. மகாபாரதக் கதை ரீமேக் செய்பவரைப் பார்த்து "நீ மகாபரதப்போரில் பங்கு கொண்டாயா? குந்திக்கு போத்தீசில் சேலை வாங்கினாயா? என்ன தகுதியில் போரைப் பற்றிப் புனைகிறாய்?" என்று கேட்பது இல்லை. ஆனால் கதைப் பொத்தகம் எழுதும் ஒருவரின் அன்றாட செயல்பாட்டை, அவரின் பதிவுகள் வழியே அவர் அறியத்தருவதை வைத்து விமர்சித்தால், "நீ அவரின் கதைப் புத்தகம் படி" என்று சொல்லும் மடையர்கள் உள்ளார்கள் இங்கே.  வங்கி ஊழியர் பணத்தை கையாளும் விதத்தைப் பற்றி வக்கிரமாக விமர்சிக்கும்போது , அல்லது தொப்பி&திலகம் எழுதி மறைந்து கொள்ளும்போது "நீ சினிமாவில் நடித்துள்ளாயா? உனக்கு என்ன தகுதி உள்ளது?" என்று எந்த முட்டாள்கள்களும் கேட்பது இல்லை.

தமிழ் இணையவெளியில் முதலில் வந்தவர்களில் பெரும்பாலனவர்கள் வாரப்பத்திரிக்கை முதல் பெத்தப் பெரிய கதை பொத்தகம் வரை படித்தவர்களாக இருந்தார்கள். இவர்களுக்கு பேச எதுவும் இல்லாத காரணத்தால், அடுத்தவர் எழுதி , இவர்களின் சன்னலில் வீசப்பட்ட ரொட்டித்துண்டுகளை வைத்து பேசிக்கொண்டு இருந்தார்கள். அடுத்தவன் அவன் பார்வையில் வடிக்கும் செய்தியின் வழியாக,  இவர்களுக்கு வரும் செய்திகள், உணர்வுகள் மட்டுமே இவர்களுக்கு பெரிதாக இருந்தது மட்டும் அல்ல , அதுவே இறுதி என்றும் நம்பினார்கள்.

இவர்களுக்கான கதவை திறந்துகொண்டு , தனக்கு எட்டும் தூரத்தில் இருக்கும் இடத்திற்கு சென்று சுயமாக அறிய எந்த முயற்சியும் செய்யாதவர்களாக மாறிப்போனார்கள். அலங்காநல்லூரில் பிறந்து அந்த வாடிவாசலில் ஏறிக்குதித்த என்னிடமே , அலங்காநல்லூர் சல்லிகட்டு பற்றி அறிய யாரோ ஒருவர் எழுதிய "வாடிவாசல்" கதைப் புத்தகம் படி என்று சொல்லும் அளவிற்கு தங்களை இருத்திக்கொண்டார்கள்.

மதவாதிகள் உலக விசயங்கள் அனைத்திற்கும் விடையை அவர்களின் மதப்புத்தகத்தில் தேடுவதுபோல, இவர்கள், தங்களின் பீடாதிபதிகளின் புத்தகங்களில் எல்லாவற்றுக்குமான விடைகளைத் தேட ஆரம்பித்துவிட்டார்கள். கதையும் கதை சார்ந்த வாசிப்பு அதையொட்டிய இரசிக சபை என்று இதை ஒரு மதமாக்கி வருகிறார்கள்.

புத்தகம் ஒரு சன்னல். ஆனால் உங்களுக்கான கதவை நீங்கள்தான் திறக்க வேண்டும். எல்லாவற்றையும் நேரடி அனுபவத்தில் அறியமுடியாது. அப்படியான வேளையில் புத்தகங்கள்தான் சன்னல். ஆனால் சன்னல்வழி பிம்பத்திலேயே தங்கிவிடுதல் என்பது நோய்.

தமிழில் "படைப்பு" (Creative work)  , "படைப்பாளி" (creative worker)  என்ற வார்த்தைகளுக்கு,  தாயத்து கட்டி, மந்திரம் ஓதி அதைப் புனிதமாக‌ உருவேற்றி , கதைப் பொத்தகம் எழுதும் தொழிலுக்கு தாலியாக கட்டிவிட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது.

கதை எழுதுபவன் மட்டுமே படைப்பாளி , மற்ற தொழில்கள் செய்பவன் படைப்பாளியாக இருந்துவிடவே முடியாது என்று நம்ப வைக்கப்பட்டுள்ளார்கள். "மல்ட்டி லெவல்" மார்க்கெட்டிங்கில் இருக்கும் பதவிகள் போல , இவர்களின் வாசகப் பதவியை அடைகிறார்கள். அதைப் புனிதம் என்றும் மனதார நம்புகிறார்கள். "சினிமா என்ற படைப்பின் இரசிகனும் , கதை என்ற படைப்பின் இரசிகனும் , படைப்பு & இரசிகன் என்ற‌ தளத்தில் ஒன்றே" என்றால், ஏதோ மேன்மக்களை தீண்டத்தகாதவர்களோடு ஒப்பீடு செய்துவிட்டதுபோல பதறுகிறார்கள்.

இவர்களின் புனித வார்த்தையான படைப்பு /படைப்பாளி என்றால் என்ன என்று பார்ப்போம்.

சின்னக்குழந்தையின் கிறுக்கல்கள்கூட Creative  (படைப்பு) என்ற வகையில்தன் வரும். கதைபொத்தக் தொழிலும் Creative (படைப்பு) தன்மை உள்ளது. கதைபொத்தம் எழுதுபவர்கள் மட்டுமே Creative (படைப்பு) தன்மையுள்ளவர்கள் என்று இவர்கள் நம்ப வைக்கப்பட்டுள்ளார்கள். ஓவியம், நாடகம், சிற்பம், பேச்சு கட்டடக்கலை, கோலம் போடுதல் என்று எல்லா செயல்பாடுகளிலும் Creative (படைப்பு) தன்மை உள்ளது.  புரோட்டா சுற்றும் 100 பேரை எடுத்துக்கொண்டால் , ஒவ்வொருவரின் கை லாகவமும் ஒருமாதிரி இருக்கும். அந்த தொழிலிலும் படைப்பு வாய்ப்பு (creative scope ) உள்ளது என்பதை,  கதைத் தொழிலில் உள்ளவர்கள்  ஏற்கவே மறுக்கிறார்கள்.  எழுதுவதை வேலை (work), தொழில் (job/business) , பொழுது போக்கு (hobby ) என்று எந்த வகைப்பாட்டில் வைத்தாலும் , அதைப்போல மற்ற செயல்களுக்கும்  படைப்பு வாய்ப்பு (creative scope ) இருக்கலாம் என்பதை  மனதார மறுக்கிறார்கள். இது ஒரு மன நோய்.

ஒவ்வொரு தொழிலும் அந்த தொழிலைச் செய்பவருக்கு அந்த தளத்திற்கான படைப்பு வாய்ப்பு (creative scope ) உள்ளது. இதுதான் உண்மை. அந்த வாய்ப்பை எப்படி பயன்படுத்துகிறார்கள் , அதில் இருந்து சமூகத்திற்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள் என்பது அடுத்த கட்டம். உடனே பிக்பாக்கெட்டும் தொழில்தானேஎன்றால் "ஆம் தொழில்தான்". ஆனால் , அது சமூகத்தில் என்ன தாக்கம் ஏற்படுத்துகிறது என்பதில் அடுத்த கட்டம் உள்ளது. சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு செயல்களும் , அந்த சமூகத்தில் அதற்கான தடத்தை விட்டுச் செல்கிறது. எது சரி? எது தவறு? எது அளவில் சிறந்தது? என்பது எல்லாம்,  அடுத்த கட்ட அளவீடுகள்.

படைப்பு = Creation
படைப்புத்தன்மை = Creativeness
எழுத்து = Writing
எழுத்தாளுமை = Proficiency in writing.

ஒவ்வொரு துறையிலும் ஆளுமைகள் (professional and commanding)  ஆட்கள் இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் படைப்பு/ஆளுமை என்பதை ஒரு துறைக்கும் மட்டுமான புனித பரிவட்டமாக மாற்றிவிட்டார்கள் இந்த தமிழ் எழுத்துவேலை செய்பவர்களும் , அவர்களின் இரசிகர்களும்.

இணையத்தில் இவர்கள் அரசியல் அடியாட்கள்போல , அவர்களுக்கான ஒரு அடியாட்கள் கூட்டத்தையும் வைத்துள்ளார்கள். இவர்களை எதிர்த்து ஏதேனும் சொல்லிவிட்டால் "நீ முட்டாள். கதை படி " என்ற மந்திரத்தை எடுத்து வீசுவார்கள்.

இப்படியான ஒரு கூட்டத்தை செயமோகன் என்பவர் இணையத்தில் வளர்த்து வருகிறார். வருடம் ஒரு முறை ஊட்டியில் தங்கி இலக்கியம் பேசுவது என்று காலம் தள்ளிய இவர்கள், இவருக்கு மத்திய அரசின் விருது வேண்டி நடிகர்களின் சிபாரிக்கடிதங்களை பெற்றவர்கள்தான் என்றும் சொல்கிறார்கள் இவரின் எதிர் முகாம் மக்கள்.  வெகுசன அங்கீகார‌ மோகம் தலைக்கேறிய பித்தசபை இது. இறுதியில் இவர்களே "விசுணுபுர அவார்டு கம்பெனி" ஒன்றை ஆரம்பித்தும் விட்டார்கள். இது எல்லாம் அவர்களின் தொழில் சார்ந்தது , இருந்துவிட்டும் போகட்டும்.

இவர்களில் பலர் வேத (வர்ணாசிரம) விரும்பிகளாகவும், இந்துத்துவா கட்சி சார்பானவர்களாகவும் இருப்பதில் வியப்பு இல்லை. ஆரம்பத்தில் இருந்து நான் இவரை,  வர்ணாசிரமப் பற்றாளராக , இந்துத்துவா இயக்கங்களின் இலக்கிய அதிகாரகமாகவே அறிந்து வந்துள்ளேன். அதற்கு அவரே இன்று சாட்சியமும் கொடுத்துள்ளார்.

சமீபத்தில் மறைந்த அசோகமித்திரன் என்ற எழுத்தாளரை ஒட்டி இவர் சொல்லிய கருத்துகள் பொய்யா இல்லையா என்பது கதை பொத்தக தொழிற்சாலைப் பணியாளர்களின் பிரச்சனை. ஆனால் அந்த விசயத்தைப் பற்றிப் பேசும்போது,  இவர் எப்படி சாதியத்தைக் கையாள்கிறார் என்பது இவரைக் காட்டிக்கொடுக்கிறது. http://www.jeyamohan.in/96793#.WNkeP1PytyE


கருத்து, செய்தி என்ற அளவில் மாறுபடுகிறார்கள் என்பதற்காக, தன்னை விமர்சிப்பவர்களை எல்லாம் " அந்த எழுத்தாளரின் சாதிக்காகப் பேசுபவர்கள்" என்று சொல்லுகிறார். அரசியல்வாதிகளில் பலர் இப்படி உள்ளார்கள். ஊரையே அடித்து உலையில் போடும்போது எதையும் சொல்லாதவர்கள், ஏதாவாது பிரச்சனையில் மாட்டிக்கொண்டால் "நான் இன்ன சாதி என்பதால் என்னை இபப்டிச் செய்கிறார்கள். மக்களே பாருங்கள்" என்று கதறுவார்கள். இந்த நபர் இன்று செய்வதும் அப்படித்தான் உள்ளது.

இவருக்கு கப்பம் கட்டாவிட்டால் கடை நடத்த விடமாட்டார் போல. உயிர்க் காப்பீடு எடுப்பது போல தமிழகத்தில் எழுத்து தொழிலில் இருப்பவர்கள்,இவரிடம் காப்பீடு எடுத்து , அதற்கான பிரீமியத்தை கட்டிவிடுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் மறைந்த சிலமணி நேரத்தில், எதையாவது எழுதி, உங்களின் நண்பர்களை அல்லது குடும்பத்தை கேலிக்குரியவர்களாக மாற்றிவிடும் வல்லமை கொண்டவர்.

ஆம் இவர் தமிழக இலக்கிய அடியாள்.

.