Sunday, October 14, 2018

நீர்'வீழ்ச்சி'களின் பார்வையாளன்: It is another milestone

"ருக்கிறார்" என்பதே எனது பதிலாய் உள்ளது. "அப்பா எப்படி இருக்கிறார்?" என்ற அன்பான கேள்விகளுக்கு. அதுதாண்டி சொல்ல ஒன்றும் இல்லை.கைப்பிடி மண் சொந்தமாக இல்லாவிட்டாலும், பிறந்து விடுவதாலேயே ஒரு ஊர் நமக்கான சொந்த ஊராகிவிடுகிறது.சொந்த வீடு இல்லாதவர்கள்கூட‌ இருக்கலாம். ஆனால், சொந்த ஊர் இல்லாதவர்கள் இல்லை. எனது சொந்த ஊர், என் பெற்றவர்கள் இல்லாத ஊராய் ஆகிவிடும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது நெருக்கிவரும் உண்மை.

கசங்கிய துணிபோல ஆகிவிட்டார் அப்பா.ஆனால், அவரின் கோவமும் பிடிவாதமும் இன்னும் கஞ்சி போட்ட கதராய் உள்ளது. 83 வயதில் நிலைதடுமாறி விழுந்துவிடுதல் என்பது சிக்கலானது. படுத்த படுக்கையாகிவிட்டார்.
**

" Leave No Trace " என்ற‌ கருத்தாக்கம், மலைப்பயணங்கள் மற்றும் இயற்கையில் மனிதன் ஊடுருவும்போது கடைபிடிக்கவேண்டிய வழிகாட்டி விதிமுறைகளைக் குறிக்கும். https://lnt.org/learn/7-principles

காடுகளில் பயணம் செய்யும்போது, நீங்கள் அந்தக் காட்டின் பார்வையாளர் மட்டுமே. எதையும் மாற்றி அமைக்க உரிமை இல்லை. உங்கள் கண் முன்னால் புலியொன்று மானை அடித்து வீழ்த்தலாம். மான்கூட்டம் ஒன்று அழகிய புல்வெளியை மேய்ச்சல் நிலமாக்கலாம். நீங்கள் யாருக்காகவும் எதற்காகவும் வருந்தி, இடையூறு செய்திடமுடியாது. அங்கு நீங்கள் ஒரு பார்வையளர் மட்டுமே. மானை அடித்து தின்னும் புலிக்கு ஒரு குடும்பம் இருக்கலாம். அதன் குழந்தைகள் அதன் பாலுக்காக காத்து இருக்கலாம். தாய்ப்புலி பசியாறினால்தான் தன் குழந்தைகள் பசியாறும் நிலை இருக்கலாம். பார்வையாளனான நமக்கு, காட்டின் விதிகள் தெரியாது. அப்படியே பார்வையாளனாக பயணத்தை தொடர்வதே நல்லது.
**

ஒருநாள் முழுக்க அப்பாவின் அருகில் இருந்தேன் அதே அறையில். படுத்த படுக்கையாகிவிட்ட அவர் படுக்கையிலேயே சிறுநீர் போவதைக்கூட உணராமல் இருந்தார். அந்த அறையே துர்நாற்றம் அடித்தது. மறுநாள் காலையில் மதுரை சென்று, நண்பர் ஒருவரின் உதவியுடன் "Prevention of Bed/Pressure Sores Air mattress",  புதிய Full Foam மெத்தை, Adult Diaper இன்னும் சில மருந்துச் சாமான்கள் என்று வாங்கி வந்தேன். அறையை முழுக்கச் சுத்தம் செய்து, வெந்நீர் மற்றும் டெட்டால் கலவையில் கழுவிவிட்டேன். அப்பாவிற்கு "டவல் பாத்" கொடுத்து, பின்புறம் சுத்தம் செய்யும்போதுதான், அவருக்கு பின்பிறத்தில் பெரிய புண் வந்துள்ளதை கண்டேன். அண்ணனை அழைத்து அதைக் காட்டினேன். மருத்துவமனையில் இருந்து வந்ததில் இருந்து படுத்தே உள்ளார். தினமும் போர்வையை மட்டும் அலசி காயவைக்கிறார்கள். அவரின் உடம்பைக் கண்காணிக்கவில்லை.

பின்புறம் துடைத்து,மருந்து போட்டு, adult diaper ஐ மாட்டிவிட்டேன். மாலையிலும் ஒருமுறை செய்தேன். மதுரை "வடமலையான் மருத்துவமனை"க்குச் சென்று , அப்பாவை வீட்டில் வந்து பார்த்துக்கொள்ள செவிலியர் ஒருவரை ஏற்பாடு செய்தேன். இவை எல்லாம் இரண்டு நாட்களில் முடிந்துவிட்டது.

நான் செய்யும் எந்த செயல்களும் அப்பாவிற்கோ அண்ணனுக்கோ பிடிக்கவில்லை. அண்ணன் எதற்கு எடுத்தாலும், "எங்களுக்குத் தெரியாதா?", "நாங்க இத்தனை நாள் பார்க்கவில்லையா?" என்றே பேசிக்கொண்டு இருந்தான். அப்பாவோ, எதற்கும் ஒத்துழைக்க மறுத்தவண்ணமே இருந்தார். Adult Diaper போடுவது அவருக்கு பிடிக்கவில்லை. நான் அப்பாவிற்கு ஊட்டிவிடுவது அண்ணனுக்கு பிடிக்கவில்லை. நடுங்கும் கைகள் என்றாலும் "அவராகவே சாப்பிடவேண்டும் அதுதான் அவருக்கு எக்சர்சைசு" என்று என்னை சத்தம் போட்டான் அண்ணன்.

அப்பா அவரின் நடுங்கும் கைகளால் சாப்பிடும்போது உடல்முழுவதும் சாப்பாட்டை சிந்திவிடுகிறார். அதை யாரும் கவனிப்பது இல்லை. அதனுடனேயே தூங்கி எழுந்து உடல்முழுக்க அழுக்காகிவிடுகிறது.
**

"அவன் கிடக்கிறான் நீங்க எப்பயும் போலவே இருங்க"

"இவன் என்ன, இன்னிக்கு இருப்பான் நாளைக்கு பார்க்கப்போவது நாங்கதானே?" என்ற சத்தம் கேட்டு காலையில் கண்விழித்தேன். இரவு நேரங்கழித்து படுத்தமையால் அதிகநேரம் தூங்கிவிட்டேன்.

ஆம், எனது கவனிப்பு முறைகளால் கோவம் கொண்ட அப்பா, இனிமேல் சாப்பிடமாட்டேன் என்று உண்ணா நோன்பு இருக்க ஆரம்பித்துவிட்டார். "நான் இப்படியே இருந்து செத்துவிடுகிறேன்" என்று அவர் ஒருபக்கம் மிரட்ட, "டயப்பர் எல்லாம் வேண்டாம். நீங்க எப்பவும்போலவே இருங்க" என்று அண்ணன் ஒரு பக்கம் அவருக்கு ஆதரவாய் இருப்பதுபோல என்னை எதிர்க்க அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டிருந்தான். அவர்கள் அனைவரும் என்னை அந்த அறையில் வேண்டாத விருந்தாளியாக மட்டுமல்ல, ஒரு எதிரியாய் உணரச்செய்து கொண்டிருந்தார்கள்.

காந்தியின் வன்முறை போல அப்பாவின் உண்ணாவிரதம், "இவன் என்ன செய்வது எங்களுக்குத் தெரியாததா?" என்ற அண்ணனின் கோவம் என்று ஆரம்பித்த சண்டைகளில் மனம் வெறுத்துப் போயிற்று எனக்கு.

நான் செய்த‌ வேலைகளை தொடர்ந்து செய்ய நாளை முதல் மதுரை வடமலையான் மருத்துவமனையில் இருந்து செவிலியர் ஒருவர் வருகிறார். நிச்சயம் அவர் இவர்களை மீறி இந்தச் சூழ்நிலையில் வேலை செய்ய முடியாது. அதுவும் நான் ஏற்பாடு செய்த செயல் என்பதால் நிச்சயம் அண்ணனுக்குப் பிடிக்காது. மருத்துவமனையை அழைத்து அவர்களின் சேவையை இப்போதைக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டு, அண்ணனிடம் உனக்குச் சரியென்றுபடும்போது அழைத்துக்கொள் என்று சொல்லிவிட்டேன்.
**

எனது ஊரில் எனது வீட்டில் நான் பார்வையாள‌னாகிப் போனேன்.ஓவென்று கீழிற‌ங்கி, தலைகுப்புற வீழ்ந்து, முட்டிமோதி கதறியழும் நிலைகவிழ்ந்த ஆற்றை, நீர்வீழ்ச்சியென்று ஓரமாக இருந்து பார்க்கவேண்டிய நிலை. ஆறு கவிழ்கிறதே என்று பள்ளத்தை சரிசெய்துவிடமுடியாது. அதுதான் காட்டின் விதிகள்.

வீட்டில் பணத்திற்கு குறைவில்லை. என்னைவிட பணக்காரர் என் அப்பா. ஆம், வீடு சேமிப்பு அரசு ஓய்வூதிய‌ம் என்று அவர் நல்ல நிலையிலேயே உள்ளார். அதுதாண்டி அவருக்கு தேவையான எல்லாவற்றையும் செய்யும் விரும்பிய நிலையில் நான். அண்ணனும் வசதியாகவே உள்ளான். இருக்கும் வீடுகள் பத்தாது என்று பல‌ இலட்சங்களைக் கொட்டி பலமாடி வீடு ஒன்றைக் கட்டிக்கொண்டுள்ளான். பணம் என்பது குறை அல்ல இங்கே. ஆனால், அவர்கள் செய்வது அவர்களுக்கு சரியாய் உள்ளது. நான் சொல்வதோ அல்லது செய்வதோ அவர்களுக்கு பிடிக்கவில்லை.

போர்வை நனைந்தால் துவைத்துக் கொள்ளலாம். டயப்பர் தேவை இல்லை என்று, தினமும் நனைந்த போர்வையை துவைக்க ஆள் வைக்கிறார்களே தவிர, எப்போதும் நனைந்த படுக்கையும், அதனால் வரும் புண் மற்றும் இதர சிரமங்களையும் புரிய மறுக்கிறார்கள்.
**

கலைஞரைப் பார்த்துக்கொண்ட குடும்பத்தினரைவிட, ஒரு நல்ல நோயாளியாய் மருத்துவரின் ஆலோசனைகளின் பேரில், மழை பெய்தாலும் குடைபிடித்து நடந்த கலைஞர் என் கண் முன்னே வந்துபோனார்.

வழக்கம்போலவே தரையில் எறியப்பட்ட மீனாய் உணர்ந்தேன். ஒன்றும் செய்ய இயலவில்லை. மேற்கொண்டு பிரச்சனைகளைத் தவிர்க்க அந்த அறையைவிட்டு வெளியில்வந்து மாடிக்குச் சென்றுவிட்டேன். இரண்டு வாரங்களாக நான் இருந்தும் இல்லாமலேயே இருந்தேன். அப்பாவிற்கும் உதவமுடியவில்லை. அவரே அதை வெறுக்கிறார். அண்ணனைமீறி ஒன்றும் செய்ய முடியவில்லை.

ஒவ்வொருவருக்கும் சரியெனப்படுவதையே அவர்கள் செய்கிறார்கள். அப்பா, அவர் என்ன சொல்கிறாரோ அதைத்தாண்டி வேறு எதுவும் செய்ய விடுவது இல்லை. அண்ணனோ என்னை ஒரு பார்வையாளன் என்ற இடத்திலேயே நிறுத்த விரும்புகிறான்.
**

அன்றைய‌ உடன்கட்டை, தேவதாசி ஆதரவு முதல் இன்றைய அய்யப்பன் ஆதரவு வரை, தான் மதிப்பிழக்கிறோம் என்பது தெரியாமலே ஆதரிக்கிறார்கள் பெண்கள். ஆனால், வேறு சிலருக்கு அது தவறாய்த் தெரிகிறது. நீதிமன்றம் அரசாங்கம் போன்ற அதிகார மையங்களால் மட்டுமே இதனை உடைக்கமுடியும்.

அதிகாரமற்ற பார்வைகள் அதிகாரமில்லாத காரணத்தினாலேயே அவமானப்படுத்தப்படும் ,நிராகரிக்கப்படும். அதுவே எனக்கு நடந்தது. 17 வருடங்களாக தொலைவில் வாழ்வது உறவுகளிடம் தொலைந்த வாழ்க்கையே. Long distance relationship என்பது, காதலில் மட்டுமல்ல எந்த உறவுகளிலும் சரியாக வராது. உறவாடாமல் உறவு இல்லை.
**

அப்பாவின் நண்பர்களிடம் பேசினேன். அனைவரும் நான் சொல்வதை ஏற்றுக்கொண்டாலும், இறுதியில் "அப்பா அப்படித்தான். நீதான் செய்யணும்" என்றார்கள். எப்படிச் செய்வது என்றுதான் தெரியவில்லை. அது அவர்களுக்கும் தெரியவில்லை.

ஓவென்று கதறிவிழும் அருவியை, நீர்வீழ்ச்சியென நின்று பார்ப்பதே காட்டில் ஒரு பயணியாய் செய்ய முடிந்தது. பாதைகளை மாற்றிவிட முடியாது. நமக்குச் சரியெனப்படுவது மற்றவர்களுக்கும் சரி என்று இருக்காது என்று எனக்குத் தெரிந்த போதும், இது போன்ற மருத்துவச் சூழ்நிலைகளில், நோயாளியின் விருப்பத்திற்கு விட்டுவிடுவது சரியா? என்பது தெரியவில்லை. அதுவும், என் அப்பா போன்ற பிடிவாதக்காரர்கள், என் அண்ணன் போன்றவர்களிடம், அவர்களின் வழிக்கே விட்டுவிடுவது என்பது பலமுறை என்னை " Point of No Return" போய் நிறுத்துயுள்ளது. இந்த முறையும் அதுவே நடந்துவிட்டது.
**

மூன்று வாரங்கள் அப்பாவுடன் அவருக்கு உதவியாய் இருக்க நினைத்துச் சென்றது வேலைக்காகவில்லை. இரண்டு வாரங்களில் கிளம்பிவிட்டேன். மகனாய் ஏதும் செய்ய முடியாது. பார்வையாளனாய் பரிதவிக்கிறேன்.

நல்ல மாணவன், நல்ல கண‌வன், நல்ல குடிமகன்..இப்படியான "நல்ல" நல்லவைகளில் "நல்ல நோயாளி" என்பதும் முக்கியமானது. சின்ன வயதில் அப்பாவை அதிசியத்து அவரிடம் இருந்து பாடங்கள் கற்றுக்கொண்டேன். "டே நீ அவன் கால்தடத்த மிதிச்சாலும் அவன் புத்தி வராதுடா" என்று ஒரு கிழவி யாரோ ஒருவரைத்திட்டியதைக் கேட்ட நான், என் அப்பாவின் கால்தடங்களை மிதித்தே பின் தொடர்வேன் சின்னவயதில். நானும் அப்பா மாதிரி வரவேண்டும் என்ற ஆசையால்.

இன்றும் அப்பாவிடம் இருந்து பாடங்களைக் கற்கிறேன். எப்படி இருக்கக்கூடாது என்று.
**

ஏற்கனவே பலமுறை சொன்னதுதான். நாம் நமது முதுமைக்காலத்திற்கு திட்டமிட வேண்டும். அனைவரும் ஒருகாலத்தில் படுத்த படுக்கையாகவோ  அல்லது படுத்தவுடன் எழுந்திருக்காமல் சென்றுவிடும் சூழலோ வரலாம். அப்படியான நேரத்தில் என்ன செய்யலாம் என்பதை குழந்தைகளுக்கும் உறவினர்களுக்கும் இப்போதே சொல்லிவிடவேண்டும். முதுமைக் காலத்தில் குழந்தைகளுடன் இருப்பது சிறந்ததுதான். ஆனால், அதற்கான நடைமுறை வாய்ப்புகள் வருங்காலத்தில் இருக்குமா? இல்லாவிட்டால் எங்கே? எப்படி? முதுமையைக் கழிக்கப்போகிறோம் என்பதற்கான திட்டங்கள் அவசியம்.

உதாரணத்திற்கு Coma (state of unconsciousness) போன்ற நிலைக்குச் சென்றுவிட்டால், நம்மை நம் உறவினர்கள் குழந்தைகள் என்ன செய்யவேண்டும். எவ்வளவு காலம் பராமரிக்கலாம்? சட்டம் அனுமதிக்கும் பட்சத்தில் மருத்துவத்தை நிறுத்தலாமா? என்பது போன்றவைகளை இப்போதே பேசலாம். அமெரிக்கா போன்ற இடங்களில், பெற்றோர்கள் இருவரும் விபத்தில் இறந்தால் குழந்தைகளுக்கான பராமரிப்பை யார் செய்யவேண்டும் என்று சொல்லியிருக்காவிட்டால், அரசு அவர்கள் விதிப்படி பாதுகாவலரை நியமிக்கும். இதுபோன்ற சிக்கல்களை திட்டமிடல்கள்மூலம் தவிர்க்கலாம்.

உறவுகள் தாண்டி நம்மைக் கொண்டாட சிலரும், நாம் இருப்பதற்கான வலுவான காரணங்களையும் (மூத்திரச் சட்டி பெரியார்) ஏற்படுத்திக்கொண்டால் முதுமைகூட இனிக்கும்.
**

இறப்பும் ஒரு milestone. இறுதியான  milestone. அதற்காகவும் திட்டமிடுதல் வேண்டும்.