Friday, March 15, 2019

சட்டெனத் திரும்பும் வளைவுகள்: பஞ்சாலைகளுடன் நின்றுவிட்ட சுவாசம் Franklinville,NC

வளைவுகள் என்றும் அபாயகரமானது. ஆச்சரியங்களை தேக்கி வைத்துள்ள, பள்ளம் மேடுகளைக் கொண்ட வளைவுகள், அலாதியானதும்கூட. அன்றும் அப்படித்தான். அலுவலகம் செல்லும் வழியில், ராம்சேர்(Ramseur) (ராமேசுவரம்?)  தாண்டி, வலதுபுறம் 'கைகாட்டி' காட்டிய ஊருக்குள் திரும்பினேன்.

ப‌யணம் என்பது, கண்டம் விட்டு கண்டம் தாண்ட வேண்டும் என்பது அல்ல. என் ஊரிலேயே நான் செல்லாத தெருக்களும், பார்க்காத மனிதர்களும் பல. தினமும் ஒரு புதிய பாதையில் செல்வதே புதிய பயணம் தான். உள்ளமும் உடலும் புதிய பாதையில் விழித்துக்கொள்ளும்.பழகிய இடங்களில் மூளைக்கு வேலை இல்லை.

Muscle memory என்று சொல்வார்கள். பழகிய இடங்களில் அது வேலையைக் காட்டும். மூளை ஓய்வெடுக்கும்.
**

"ஃபிராங்ளின்வில்" (Franklinville) என்ற ஊரை நான் அலுவலகம் செல்லும் பாதையில் உள்ள கைகாட்டி மரத்தில் பார்த்தது தவிர வேறு எந்தத் தகவலும் இல்லை என்னிடம் அப்போது. சட்டெனத்திரும்பி, சில மைல்தூரம் சென்றிருப்பேன்.இடிபாடுகளுடன் கூடிய, செடிகள் மண்டிய கட்டிடம் வரவேற்றது. அதன் அருகில் உள்ள ஒரு கார் ரிப்பேர் கடையில் சில தலைகள் தென்பட்டது.

ஒரு ஊரின் முகப்பே அதன் கதைச் சுருக்கத்தைச் சொல்லிவிடும். "ஃபிராங்ளின்வில்" ஊர் சோம்பலுடன் காட்சி அளித்தது. எந்த ஆரவாரமும் இல்லை. ஏன், மக்களின் நடமாட்டம் இல்லை.
**

முக்கிய வீதி என்ற வீதியில் ஒரே ஒரு கடை இயங்கிக்கொண்டு இருந்தது. அதுதான் அந்த ஊரில் உள்ள ஒரே ஒரு உணவகமும்கூட‌. தயக்கத்துடனே உள்ளே நுழைந்தேன். "வழிதவறி வந்துவிட்டானோ இவன்?" என்றவாறு தலைகள் திரும்பியது. கிராமத்து மணம் நிரம்பிய கடை. உள்ளூர் மனிதர்கள் உள்ளே. அவர்களின் உடைந்த ட்ரக்குகள் வெளியே.

சங்கிலித் தொடர் உணவங்களில் இருப்பதுபோல பழக்கமான மெனு எதுவும் இல்லை. கல்லாவில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும், சமையல் பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்களும் இருந்தார்கள்.என்ன கேட்பது என்று தெரியாமல், "நான் அகறி (No meat) .எனக்கு முட்டை மற்றும் காய்கறி கலந்து, ஆம்லேட் மாதிரி ஏதாவது செய்துதர முடியுமா?" என்றேன். தன்னிடம் இருக்கும் காய்கறிகளைச் சொல்லி, அது போதுமா என்று கேட்டு எனக்கான உணவைத் தயார் செய்ய ஆரம்பித்தார்.
**

1847 பதிவு செய்யப்பட்ட இந்த ஊரின் மக்கள் மன்றம் (Town Hall ) ஒரு பாழடைந்த கட்டடம்போன்ற‌ ஒன்றில் இயங்கி வருகிறது. அதன் பின்னால் நூலகம். அதை ஒட்டிய இன்னொரு பக்கம்தான் இந்த ஊரின் ஒரே ஒரு உணவகமான இந்த Franklinville Restaurant உள்ளது. எனக்கான சமையல் ரெடியாகிகொண்டிருந்தது. காத்திருக்கும் நேரத்தில் அங்கு வாங்கிய காஃபியை, கடைக்கு வெளியில் வந்து அந்த ஊரின் காற்றையும் சேர்த்து உறிஞ்சினேன்.
**

வடக்கு கேரொலைனா மாநிலம் புகையிலைக்கும், பஞ்சாலைக்கும் பெயர் பெற்றது. பஞ்சாலைத் தொழிலின்போது கம்யூனிசம் இருந்திருக்கிறது இந்த மாநிலத்தில். ஆலைதோறும் கூட்டம் போட்டு, தொழிற்சங்கங்களை வளர்த்தவர்களின் வரலாறு உண்டு இங்கே.

முக்கியமான திரைப்படம் -Norma Rae (1979)
https://www.youtube.com/watch?v=X8ulYIVcCeY

இந்த மாநிலத்தின் பழையகால பஞ்சாலைக் கதையை, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் காட்டும் இந்தப்படம். கிராமங்களில் நடந்த வரலாறுகள் தேடினால் மட்டுமே கிடைப்பவை.

Norma Rae (1979) IMDB
https://www.imdb.com/title/tt0079638/

இந்தப்படம் உண்மையான ஒரு கதையைத் தழுவி எடுக்கப்பட்டது.
https://en.wikipedia.org/wiki/Crystal_Lee_Sutton

இந்த மாநிலம் இப்படி பல தொழிற்சங்க கதைகளைக் கொண்டது.
https://en.wikipedia.org/wiki/Loray_Mill_strike

**
அமெரிக்க உள்நாட்டு போருக்கு (U.S. Civil War ) முன்னான காலத்தை, Antebellum (before the war) என்று சொல்வார்கள். அப்போது Deep River என்ற ஆற்றின் கரையில் இருந்த இரண்டு பஞ்சாலைகளைச் சுற்றி இரண்டு ஊர்கள் உருவாகி வந்தது. 1847 வாக்கில் இந்த இரண்டும் சேர்ந்து Franklinville என்ற ஊராக அதிகாரபூர்வமாக உருவாகிற்று. ஊரின் இரண்டு முனைகளில் முளைத்த பஞ்சாலைகள், அந்த ஊரின் நடுவில் ஓடும் Deep River என்ற ஆற்றின் ஆற்றுநீரைப் பயன்படுத்திக்கொண்டது.

இன்றும் அந்த ஆறு ஆரவாரமற்று ஓடுகிறது. ஆனால், ஆலைகள் அழிந்துவிட்டது. வெற்று கட்டிடங்களாக, ஊர் காக்கும் எல்லைக் காவல் தெய்வங்கள் போல செயலற்று நின்றுவிட்டது இரண்டு ஆலைகளும்.
**

கிரீன்ஃச்பொரோ (Greensboro) பக்கம் உருவாகும் இந்த Deep River ஆறு, ஆஃச்பரோ (Asheboro) ,ஃபிராங்ளின்வில் வழியாகப் பாய்ந்து , சான்போஃர்ட் (Sanford) வரை சென்று, அதற்குப்பிறகு Haw River டன் இணைந்து Cape Fear River,  என்ற ஆறாக மாறி கிழக்கு கடல்வரை செல்கிற‌து .
https://en.wikipedia.org/wiki/Cape_Fear_River

Deep River ம், Haw River ம் இணையும் இடத்தில்தான் (சான்போஃர்ட் - Sanford) ,நம் முப்பாட்டன் முருகனுக்கு கடைவிரித்து ஆன்மீகத் தொழில் செய்ய சிலர் முதல் போட்டுள்ளார்கள் என்பது உங்களுக்கான கூடுதல் தகவ‌ல்.
**

https://youtu.be/0h8WSR5Z1NM

எனக்கான உணவு சமைக்கப்பட்டுவிட்டதை அந்தப் பெண் வந்து சொன்னார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, அதை வாங்கிக்கொண்டு ஊரைச் சுற்ற ஆரம்பித்தேன்.ஐந்து நிமிட கார் பயணத்தில் மொத்த ஊரையும் சுற்றிவிடலாம். டவுன் என்பது இந்த உணவகமும், அதன் மேல் இருக்கும் நூலகமும், அவற்றுக்கு நடுவில் இருக்கும் ஊர்ப்பஞ்சாயத்து கட்டிடமும்தான். மூன்றும் ஒரே கட்டிடத்தில் உள்ளது.

இதற்கு எதிர் புறத்தில் தீயணைப்பு நிலையம் உள்ளது. சிறிது தூரம் சென்றால் பள்ளிக்கூடமும், அஞ்சல் அலுவலகமும் வரும். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளை சிறிது நேரம் வெறித்துப் பார்த்தேன். நான் வசிக்கும் இடத்தில் உள்ள பள்ளியின் சொகுசும், இந்தப் பள்ளியின் நிலையும், சற்றே தடுமாற வைத்தது. இப்படியான கிராமங்கள் பல உள்ளது. இவர்களும் வாழ்ந்துகொண்டுதான் உள்ளார்கள். இதுவும் அமெரிக்காதான்.

இப்போது இந்த ஊரின் வருமானத்தைப் பெருகச் செய்ய, Deep River ஆற்றினை ஒட்டி, பூங்காக்கள், கேம்ப் சைட் , என்று விரிவாக்கம் செய்து வருகிறார்கள்.
**

அழகான அந்த ஆறு,பல கதைகளை கரைகளில் விட்டுவிட்டு, நீரோடு ஓடிக்கொண்டே உள்ளது. தங்கிவிட்ட கதைகள் கேட்பாரன்றி கிடந்தன. சிறிதுநேரம் அந்தப் புல்வெளியில் அமர்ந்து அவற்றின் கதைகளை உள்வாங்கிக்கொண்டேன் உணர்வில்.

இந்த ஊரில் வரலாற்றை எழுத வேண்டும் என்றால், இந்த நதியின் தோற்றுவாயில் ஆரம்பித்து இந்த ஊரின் கரையில் முடிக்கவேண்டும். இப்போதைக்கு இயலாதது. இடிந்த கட்டிடங்களை புகைப்படமாகவும், தொலைந்துபோன சுவாசங்களை மனதிலும் ஏற்றிக்கொண்டேன்.மறுமுறை இந்த ஊருக்கு வருவேனா என்று தெரியாது.
**

"ஃபிராங்ளின்வில்" ஊரின் சுவாசம், அங்கிருந்த பஞ்சாலைகள் நின்றபோது நின்றுவிட்டது போல.இரண்டாவது பயணம் என்பது சுவைக்கப்பட்ட கரும்பின் சக்கைபோல ஆகிவிடுகிறது எனக்கு. இருந்தாலும் இந்த ஊர் என்னை என்னவோ செய்கிறது. ஒரு இரவு ஏதேனும் ஒரு வீட்டில் கேட்டு தங்க வேண்டும். ஒரு இரவு தங்காத ஊர்களை சுவாசித்தேன் என்று சொல்லிக்கொள்வது இல்லை நான்.

http://www.townoffranklinvillenc.org/
http://www.livingplaces.com/NC/Randolph_County/Franklinville_Town/Franklinville_Historic_District.html
https://sites.google.com/site/macwhat/lowermill
http://eofp.net/franklinville.html

No comments:

Post a Comment