
ஈராக்கிற்கு எதிரான அமெரிக்காவின் செயல்பாட்டை விரும்பாத, ஏற்றுக் கொள்ளாத பலரில் நானும் ஒருவன். ஈராக் மட்டுமல்ல அமெரிக்கா பல நாடுகளில் பலவாறாக ஆட்டம் ஆடியுள்ளது. சமீபத்தில் நான் வசிக்கும் இடத்தில் UnitedForPeace.org என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஒரு அமைதிப் போராட்டத்தில் கலந்து கொண்டேன்.
நான் "No WAR" என்று எழுதிய அட்டைய வீட்டில் இருந்து எடுத்துச் சென்று இருந்தேன். காரை கூட்டம் நடக்கும் இடத்திற்கு வெகுதொலைவில் நிறுத்திவிட்டு "No WAR" அட்டையுடன் நடக்க ஆரம்பித்தேன். காரை நிறுத்திய இடம் நான் வழக்கமாக செல்லும் பஸ் நிறுத்ததிற்கு அருகில் உள்ள வங்கிக்கருகில் இருந்ததால் பயம் ஏதும் இல்லை.
அகடமி தெருவில் (Academy Street) உள்ள நூலகத்தின் முன்புறம் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதிகபட்சம் 5 போலீஸ் வாகனங்கள் கண்ணில் பட்டன. நான் ஒருவனே அந்தக் கூட்டத்தில் இந்தியமுகம் ஆதலால் போலீஸ் என்னை ஒரு வேற்றுகிரக ஜீவனைப் பார்ப்பது போல் பார்த்தார்கள். அதிலும் ஒருவர் நான் எடுத்துச் சென்ற அட்டையில் என்ன எழுதியிருக்கிறேன் என்பதைப் பார்ப்பதிலேயே குறியாக இருந்தார்.
நான் அவரைப் பார்த்து ஒரு ஹலோ சொன்னேன். அந்த ஹலோ எங்கள் இருவருக்கும் இடையே இருந்த மெளனப் போரை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தது. சில நேரங்களில் ஒரு சாதரண ஹலோவும் சிநேகப் புன்னகையும் பல மேஜிக்குகளை செய்ய வல்லது.
புதிதாக பஸ் நிறுத்ததில் அல்லது ஒரு பொது இடத்தில் தனியாக இருக்கும் போது அருகில் உள்ளவர்களை (ஆணோ பெண்ணோ) பார்த்து ஒரு சிநேகப் புன்னகையை வீசிப்பாருங்கள். தமிழ் நாட்டில் பஸ் நிறுத்ததில் நிற்கும், தெரியாத பெண்களிடம் சிரித்து, நீங்கள் ஈவ் டீசிங்கில் மாட்டி, உங்கள் வாழ்க்கை சிரிப்பாய் சிரித்துப்போனால் நான் பொறுப்பல்ல.

சிறிய ஊராக இருந்த போதும், ஒரு 50 பேர் கூடிவிட்டோம். பெரும்பாலும் அமெரிக்க மக்களே இருந்தனர். கூட்டத்தில் ஒரே ஒரு முஸ்லீம் குடும்பத்தைப் பார்க்க முடிந்தது. "No War" என்று எழுதிய அட்டையை எடுத்துச்சென்ற நான், மெழுகுவர்த்தி எடுத்துச் செல்லவில்லை.
இதை கண்டனக் கூட்டம் என்றே நினைத்து இருந்ததால் மெழுகுவர்த்தி என் புத்திக்கு எட்டவில்லை. அட்டையை இரண்டு கையாலும் தூக்கிப் பிடித்துக்கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக நானும் கலந்துவிட்டேன்.
என்னிடம் மெழுகுவர்த்தி இல்லாதது கண்டு அருகில் இருந்த ஒரு பெண், தன்னிடம் இருந்த இரண்டு மெழுகுவர்த்திகளில் ஒன்றை எனக்குத்தந்தார். அவர் செய்தது அவரின் 4 வயது பையனுக்குப் பிடிக்கவில்லை. அவன் அவனது அம்மாவிடம் சண்டை போட்டு அழுக ஆரம்பித்து விட்டான். எனக்கு தர்ம சங்கடமாகிவிட்டது. அந்தப் பையனிடமே மெழுகுவர்த்தியை திருப்பித்தர முயன்றேன். ஆனால் அந்தப் பெண் அதை தடுத்துவிட்டு தனது மகனுக்கு பகிர்ந்து கொள்ளல் (Sharing) பற்றி ஒரு குட்டி லெக்சர் கொடுத்தார்.
அவன் சமாதானம் அடைந்ததாகத் தெரியவில்லை. ஆனால் அழுகை நின்றுவிட்டது. கூட்டம் முடியும் வரை அவன் என்னை ஒரு வில்லன் ரேஞ்சுக்குப் பார்த்துக் கொண்டே இருந்தான்.

ஈராக் போரில் இறந்த அமெரிக்கப் படைவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி கூட்டம் ஆரம்பித்தது. அனைவரும் மெழுகுவர்த்திகளை கையில் ஏந்தி பல பாட்டுகளைப் பாடினார்கள். எனக்கு ஒன்றும் தெரியாதலால் தேமே என்று நின்று கொண்டு இருந்தேன். பாட்டுகள் முடிந்தவுடன் பலர் புஷ்சின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.
எங்களது கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு எதிர்ப்புறம் புஷ் ஆதரவாளர்கள் "புஷ்" மற்றும் "ஈராக்" போர் ஆதரவு அட்டைகளுடன் நின்று கொண்டு இருந்தனர். அவர்கள் ஏதும் கோஷம் போடவில்லை. அமைதியாக தங்களின் ஆதரவை புஷ்சுக்கும் ,எதிர்ப்பை எங்களுக்கும் தெரிவித்துக் கொண்டு இருந்தார்கள்.

எனது அருகே இருந்த இரண்டு கல்லூரிப் பெண்கள் புஷ் ஆதரவாளர்களை நோக்கி "He is not my President" என்ற அட்டைகளைக் காட்டி வெறுப்பேற்றிக் கொண்டிருந்தனர். அவர்கள் மெழுகுவர்த்திகளை பலமாக அசைத்து பேசிக்கொண்டு இருந்தபடியால் அது அடிக்கடி அணைந்து போயிற்று. அவர்களின் மெழுகுவர்த்திகளை மறுபடி ஏற்றிட உதவி செய்தேன்.
சுமார் 30 நிமிடங்கள் நடந்த அந்த கண்டன + பிரார்த்தனைக் கூட்டம் நல்லபடியாக எந்த கலவரங்களும்(??? ) இல்லாமல் நடந்து முடிந்தது.
இந்த மாதிரியான போராட்டங்களால் புஷ் ஒன்றும் திருந்தப் போவது இல்லை.
மனதில் எனக்கு இருந்த கோபம்,இயலாமை,இரக்கம் ....இப்படி பலப்பல உணர்வுகளுக்கு, இந்தப் போராட்டம் ஒரு வடிகாலாக அமைந்து இருந்தது.
அதிக விவரங்களுக்கு:
UUSC STOP (Stop Torture Permanently) Campaign
What You Can Do to Oppose the U.S. Military Occupation of Iraq
