Monday, November 01, 2010

உங்களின் கனவுகளுக்கும் கற்பனைக்கும் எல்லையுண்டு

னவுகளுக்கு எல்லையில்லை. கனவுகாணுங்கள் இளைஞர்களே என்பது போன்ற கூக்குரல்களைக் கேட்டிருக்கலாம். ஆப்ரிக்காவின் அகண்ட காட்டுப்பகுதிகளில் நான் கேள்விப்பட்டிராத ஒரு இடம் ,செயல் , மக்களைப் பற்றி எனக்கு கனவு வ‌ந்ததே இல்லை.  கனவு என்பது காட்சி. அதற்கு ஒரு பிம்பம் வேண்டும். பிம்பத்தை கட்டமைக்க சில கட்டுமானப்பொருட்கள் வேண்டும். எங்காவது படித்த சில கதைகள் , செவிவழிக் கேட்ட கருத்துகள், கண்களால் கண்ட சில பிம்பங்கள் ...என்று ஏதாவது ஒன்று எனது மூளையின் டேட்டாபேஸில் இருந்தாக வேண்டும். அப்படி எனது மூளையில் இதுவரை புறவழி உணர்வுகளால் இன்னும் பதிவு செய்யப்படாத‌ ஒரு காட்சிப் பிம்பத்தை கனவாகக் காண்பது எனக்கு வாய்க்கவில்லை. உங்களுக்கு வாய்த்திருக்கிறதா?

சின்னவயதில் பேய்க்கனவு வாய்ப்பதற்கு முன் , பேய்க்கதைகள் என்னும் வடிவில் எனது மூளையில், பேய்க்கனவிற்கான கட்டுமானப் பொருட்கள் யார்மூலமோ ஏற்றப்பட்டு இருந்தது. அது இல்லாமல் பேய்க்கனவு சாத்தியமாகவில்லை.  "ஜகன் மோகினி" பார்த்தபின் பேய்க்கான ஒரு தெளிவான பிம்பம் விட்டலாச்சாரியின் தயவில் என் மூளையிள் வந்து உட்கார்ந்து கொண்டது.  அதற்குப்பின் வரும் பேய்கள் எல்லாம் சில காலம் "ஜகன் மோகினி"  பேய்களாகவே குட்டி குட்டியாக வெள்ளை டைட்சூட்டில் வந்தது.  இதுவே சில காலம் கழித்து அழகிய பெண்வடிவ மோகினியாக சேலை , மல்லிகை, வளையல்,கொலுசு  இத்யாதிகளுடன் அழகிய பேயாக மாறிவிட்டது.  ஒருவேளை ஆர்னிகா நாசர்  அல்லது ஜாவர் சீத்தாராமன் ?  கதை வழிவந்த உருவமோ? என்னமோ ஒன்று.  ஏதோ ஒரு புறவழி கதைகளால் என்னுள் பதியப்பட்ட‌  அழகிய பெண்வடிவ மோகினி அந்தக் கனவு பிம்பத்தை கட்டி எழுப்பியிருக்கிறது.

 கக்மக்சிக்பக்சிசுசா என்று கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? நான் கேள்விப்படவில்லை அதாவது அது எப்படி இருக்கும் என்ற காட்சியை யாரும் எனக்கு அறிமுகப்படுத்தவில்லை.  கக்மக்சிக்பக்சிசுசா என்று ஒரு கனவு வந்ததே இல்லை.  ஒருவேளை நாளை யாராவது ஒருவர் கக்மக்சிக்பக்சிசுசா கதை சொன்னால் நாளைய கனவில் அது வரலாம்.

கதைகளை மட்டுமே படித்த கதைபுத்தக வாசகர்கள் அதே கதை திரைப்படமாக வரும்போது மிகவும் ஏமாந்துவிடுவார்கள். கதையில் இருந்து திரைப்படத்தை உருவாக்கிய இயக்குனர், இவர்களின் கற்பனைகளை குலைத்து இருப்பார்.  ஒரு கதையில் வார்த்தைகளால் "அடர்ந்த காட்டில்  இருக்கும் அழகிய குளத்தின் அருகே இருக்கும் வீட்டில்... " என்று இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். 

வாசகன்1:
அதிகபட்சம் கிராமக் தோப்புகளில் மட்டுமே சுற்றித்திரிந்த ஒருவன் காடு சம்பந்தமாக வேறு எதையும் தெரிந்து வைத்திருக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். இந்தக் கதையைப்படிக்கும் அவன் "அடர்ந்த காடு" என்பதை அவன் அறிந்த கிராம தோப்புகளின் பிம்பததிற்கு உட்பட்டே கற்பனை செய்துகொள்ள முடியும். அவனால் அமேசான் காட்டினை இந்தக் கதையின் கற்பனைக்கு காட்சிப்படுத்திக் கொள்ளமுடியாது.
வாசகன்2:
வேடந்தாங்கல் மற்றும் டாப்சிலிப்ஸ் போன்ற காட்டுப்பகுதிகளைச் சுற்றிய ஒருவனுக்கு கதையாசிரியர் சொல்லும் "அடர்ந்த காடு"  என்பதை கற்பனை செய்துகொள்ள பல சாத்தியக்கூறுகள் உள்ளது. அவனால் மிகச்சிறந்த காட்டின் பிம்பத்தை கட்டிஎழுப்பி அதனில் கதையை நகர்த்த முடியும்.
வாசகன்3:
தமிழகத்தில் எழுதப்பட்ட கதை பெரு நாட்டில் வாசிக்கப்படும்போது அங்கே உள்ள ஒருவனுக்கு அமேசான் காட்டை "அடர்ந்த காடு"  என்பதற்கு இட்டு நிரப்பமுடியும்.

இயக்குனர்:
இந்தக் கதையால் கவரப்படும் ஈராக்கைச் சேர்ந்த ஒரு இயக்குனர் திரைப்படம் எடுக்கும்போது, அவரின் மண்சார்ந்த  பாலைவனச் சோலையை காடு என்பதாகக் காண்பிக்கிறார் / காட்சிப்படுத்துகிறார்.

முன்னரே பாலைவனச் சோலை பற்றிய அறிமுகம் இல்லாமல் , மேலே சொன்ன மூவரும் ஏமாற்றமாகிவிடுவார்கள். ஏன் என்றால் கதையைப் படிக்கும்போது  பாலைவனச் சோலையை அவர்களால் கற்பனைகூட செய்திருக்கமுடியாது.  அப்படியே தெரிந்து இருந்தாலும் கதையைப் படிக்கும்போது , அவர்கள் அவர்களின் வாழ்வோடு பொருந்திய / அறிமுகமான காட்டின் பிம்பத்தையே கதைக்காக எடுத்துக் கொள்வார்கள்.

அவர்களின் கற்பனையை மீறி திரைப்பட இயக்குனர் காட்சிப்படுத்தும்போது , "ஆகா இப்படியும் இருக்கலாம்" என்பதைமீறி , "நான் நினைத்ததுபோல இல்லையே" எனும்போது ஏமாற்றம் வருகிறது.

சரி அதை விடுங்கள். நீங்களே இந்தக் கதையின் வாசகன் என்று வைத்துக்கொள்ளுங்கள். கதைசொல்லி ""அடர்ந்த காட்டில்  இருக்கும் அழகிய குளத்தின் அருகே இருக்கும் வீட்டில்... " என்று சொல்லும்போது உங்களால் நீங்கள் இதுவரை அறிந்திராத ஒரு வீட்டை கற்பனை செய்யமுடியுமா? என்ன இருந்தாலும் உங்களுக்கு வீடு என்பதற்கான ஒரு அடிப்படை பிம்பம் ஏற்கனவே மனிதில் இருந்தாக வேண்டும்.

 பி ரச்சனைகளுக்கு எல்லாம் பெரிய பிரச்சனை நமது மூளையின் செயல்பாடு. எந்தப்புதிய தகவல் வந்தாலும் அதை ஏற்கனவே உள்ள ஒரு தகவல் கிடங்கில் அது இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்து அப்படி இருந்தால் அதனுடன் ஒப்பிட ஆரம்பித்துவிடும். அப்படி ஏதும் இல்லாவிட்டால், புதிய தகவல்களை அது எதிர்கொள்ளும்போது அது குறித்த சில விவரங்கள் மூளையில் புதிதாகப் பதிவாகிறது. பின்னாளில், அதுவே அடுத்து வரும் அது சார்ந்த தகவல்களை ஒப்பிடப் பயன்படுகிறது.

உங்களின் இன்றைய கனவு மற்றும் கற்பனையின் எல்லை, நீங்கள் நேற்றுவரை சேமித்த தகவல்களின் எல்லைக்கு உட்பட்டதே. புற உணர்வுகளால் ஏற்கனவே அறிமுகமாயிராத ஒன்றைப்பற்றி அகம் கனவுகாண முடியாது. அப்படி உங்களுக்கு நிகழ்ந்திருக்கிறதா? செவ்வாய் கிரகத்தில் உள்ள மனிதர்களின்(??) உருவங்களை இதுவரை புறவுணர்வுகளால் நீங்கள் அறிந்திராத ஒன்றாக கனவு காண , கற்பனை செய்ய முடிந்துள்ளதா?

உங்களின் புரிதலுக்கு அப்பால் அல்லது உங்களின் டேட்டாபேசை தாண்டிய தகவல்கள் உங்களை வந்து அடையும்போது அதை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?


Picture courtesy http://download-free-pictures.com