Thursday, October 28, 2010

கதை சொல்லிகளால் வரையப்படும் உங்கள் மனச்சித்திரங்கள்

வே கமாக ஓடிக்கொண்டிருந்தது அந்த இரண்டு மீன்கள். எப்படியாவது தப்பிவிட வேண்டும் என்ற வெறியில். பின்னால் ஒரு பெரிய சுறாமீன் போன்ற ஒன்று அதைப்பிடிக்க வந்து கொண்டிருந்தது. ஒருவழியாக எப்படியோ அந்த இரண்டு மீன்களும் தப்பிவிட்டன. நிம்மதியாக மூச்சுவிட்டாள் என் மகள்.

புதிதாக வந்துள்ள கரடிக்கு மீன் பிடிக்கவே தெரியவில்லை. அதனைச் சுற்றியுள்ள மற்ற கரடிகள் எல்லாம் சுலபமாக மீனைப்பிடித்துச் சாப்பிடும்போது இந்தக் கரடி மட்டும் எவ்வளவு முயன்றும் முடியவில்லை. எப்படியாவது ஒரு மீனைப் பிடித்து சாப்பிட்டுவிடாதா இந்தக் கரடி, என்று என் மகள் காத்து இருந்தாள். அவளின் முகத்தில் மகிழ்ச்சி. ஆம் ஒருவழியாக அந்தக்கரடி மீனைப் பிடித்துவிட்டது.

மீன் என்ற ஒரு உயிரி தப்ப வேண்டும் என்று Finding the Nemo வில் மீனின் வாழ்விற்காக காத்து இருக்கும் அதே மனம் , Brother Bear இல் வரும் கரடிக்கு மீன் உணவாக கிடைக்காதா என்று ஏங்குகிறது. எப்படி இது சாத்தியம்?

தை சொல்லிகள், ஆரம்பத்தில் இருந்தே நீங்கள் யார் பக்கம் இருக்க வேண்டும், யாருக்காக அழவேண்டும் என்பதை உங்களுக்காக அவர்கள் முடிவு செய்துவிடுவார்கள்.  கதை சொல்லியின் பார்வையின் வழியாகவே விரியும் காட்சிகள்,  உங்களின் மனதில் சித்திரங்களை வரையும். Brother Bear படத்தில் கரடி மீனைப்பிடித்து சாப்பிடும்போது "அய்யோ பாவம் மீன்" என்று சொல்லமுடியாத அளவிற்கு கரடியின் பசியின் நியாயம் முன்னரே உங்கள் மனதில் வரையப்பட்டு இருக்கும்.

ழத்தில் சாவு நிகழும்போது உங்கள் மனது வலிக்காத அளவிற்கு அதற்கு முன்னரே ஒரு கதையாடல் நிகழ்த்தப்பட்டு உங்களுக்கான சித்திரத்தை உங்கள் மனதில் வரைந்திருப்பார்கள் ஊடகங்கள். நீங்கள் மறந்தும் அழுதுவிடாத வண்ணம் கவனமாக கதையாடல் நடந்து இருக்கும். அதனால்தான் எந்த வெக்கமும் இல்லாமல் கிரிக்கெட்டை இலங்கையுடன் விளையாடவும் இரசிக்கவும் முடிகிறது உங்களால். கண்முன் நடந்த ஒன்றை நாம் வாழும் காலத்தில் நடந்த ஒன்றைப்பற்றி கொஞ்சமும் சிந்திக்கவிடாமல் உங்களைப் பண்படுத்தி ஊறுகாய் போட்டு இருப்பார்கள்.

யாருடைய பார்வையில் நீங்கள் இந்த உலகத்தைப் பார்க்கின்றீர்கள் என்பதைப் பொருத்தே உங்களுக்கான சார்பு நிலைகள் உண்டாகிறது. 

ம்பனின் பார்வையில் இராமயணத்தைப் படிக்கும்போது நிச்சயம் இராமன் சூப்பர்மேன்தான். ஏன் என்றால் இராமன் தான் கீரோ என்று முடிவு செய்து ஆரம்பிக்கப்பட்ட கதை அது.  இதே கதையை இலட்சுமணனின் மனைவியின் பார்வையில் காட்சிப்படுத்தினால் , அவள் கணவனைப் பிரிந்து வாழ்ந்த துயரம் அலசப்பட்டு , தன் கணவனைப் பிரித்த இராமன் ஒருவேளை வில்லனாக ஆக்கப்பட்டு  இருக்கலாம்.

பல கதையாடல்களால் குப்பையாக இருக்கும் கனவைக் கலைத்துவிட்டு,கதை சொல்லியின் பார்வையை கிழித்து எறிந்துவிட்டு, கதை சொல்லியை தூர நிறுத்திவிட்டு, உங்களுக்கான சித்திரத்தை நீங்களே தீட்டிக் கொள்ளும்போது ஆச்சர்யமான பக்கங்கள் தெரியவரும்.

அருந்ததிராய் பேசியுள்ளது அந்தவகைதான். தேச எழுச்சிப்பாடல்களிலும் , ஊடகங்களாலும் உங்கள் மனதில் வரையப்பட்டுள்ள பிம்பங்கள் நீங்கள் யாரை எதிரியாகப் பார்க்கவேண்டும் என்பதை புரோக்கிராம் செய்யப்பட்ட எலக்ட்ரானிக் கார்டுகள் போல ஏற்கனவே உங்கள் மனதில் பதித்துவிட்டன. அதை மாற்றி ஒருவன் தனக்கான‌ ஒரு ஓவியத்தை தன்னால் வரையமுடியாமல் போனதனால்தான் அருந்ததிராய் சொல்லும் எல்லாம் தேசவிரோதச் செயலாகத் தெரிகிறது.

கு ழந்தை பிறந்து வளரும் நாட்களில் அதற்கு மதம், சாதி, நாடு , இனம், எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பசி எடுத்தால் அம்மாவின் பால்வாசம் வீசும் முலையும், ஆய் வந்தால் அப்படியே போக வேண்டும் என்ற ஒன்றும்தான் தெரியும். அந்தக் குழந்தை வளர வளர , அது எந்தக்குடும்பத்தில் , நாட்டில் உள்ளதோ அதன் பழக்கவழக்கங்கள் சிறுகச் சிறுக நூதனக் கதையாடல்கள் மூலமாக அல்லது தன் குழந்தை என்ற ஒரே காரணத்தால் பிரயோகிக்கப்படும் சில அத்து மீறல்கள் , சடங்குகள் காரணமாக தனக்கான சித்திரத்தை அடுத்தவர்கள் மனதில் வரைய அனுமதிக்கிறது. இவ்வாறு திணிக்கப்பட்ட ஒன்றை , காலப்போக்கில் தான் தேர்ந்தெடுத்த ஒன்றாகவே நம்பவும் ஆரம்பித்துவிடும் அந்தக்குழந்தை.

 ஷிட் என்று சொல்வது நல்லது ஆனால் பீ என்று சொல்வது கெட்டது என்றுகூட உங்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டு இருக்கலாம். ஒரு நாளைக்கு பலமுறை "ஓ ஷிட்" என்று அங்கலாய்க்கும் டவுசர்பாலாஜிக்கள் "ஆ பீ" என்று சொல்ல மாட்டார்கள்.

எப்படி ஒரு வளர்ந்த குழந்தை டயப்பரைத் துறக்கிற‌தோ, அதுபோல குறைந்த பட்சம் ஒருவன் தனது 30 -  40 வயதுகளில் தன்மனதில் இதுவரை அடுத்தவர்களால் வரையப்பட்ட பிம்பங்களை, திணிக்கப்பட்ட சிந்தனைகளை தூர எறிந்துவிட்டு தனக்கான ஒன்றை கடும் தேடலுக்குப்பிறகு எடுத்துக்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் செக்குமாட்டு வாழ்க்கையாகவே சாகும்வரை இருக்கும்.

பாக்சைட் தாதுவை விற்க பங்காளியைக் கொள்ளலாம். அவன் நிலத்தை அபகரிக்கலாம். அவனை சொந்த நாட்டில் அகதியாக்கலாம்.ஆனால் எவன் இந்த உண்மையைச் சொல்கிறானோ அவன் தேசத்துரோகி. தேசம் என்பதில் அவர்கள் இல்லையா?

அடுத்தவன் சொல்லும் கதையின் வழியாகவே நீங்கள் வாழ்க்கையில் சார்பு நிலைகளை எடுத்தால், உங்களுக்கான எதிரியையும் நண்பனையும் அவனே தீர்மானிக்கிறான். நீ என்ன சாப்பிட வேண்டும் , இந்த தீபாவளிக்கு என்ன ஜட்டி போட வேண்டும் என்பதைக்கூட‌  விளம்பரங்கள் என்ற ஹைக்கூ கதையாடல்மூலம் உன் மூளையில் திணிக்கிறார்கள்.

சுய சிந்தனையில்லாத உங்கள் மூளை எதற்கு? டவுசர் த ரோபோவாக இருந்துவிடலாமே?


India: Don't mine us out of existence: Bauxite mine and refinery devastate lives in India
http://www.amnesty.org/en/library/info/ASA20/001/2010/en

India is a corporate, Hindu state: Arundhati
http://ibnlive.in.com/news/india-is-a-corporate-hindu-state-arundhati/130817-3.html

India Inc Stinks-SEZ ல் செக்ஸ் அனுமதி உண்டா ?
http://kalvetu.blogspot.com/2007/02/india-inc-stinks-sez.html

There's a tribe in India that is getting pushed off its sacred mountain for a bauxite mine.
http://kalvetu.blogspot.com/2010/07/blog-post_08.html
Picture courtesy http://download-free-pictures.com

26 comments:

 1. //இதுவரை அடுத்தவர்களால் வரையப்பட்ட பிம்பங்களை, திணிக்கப்பட்ட சிந்தனைகளை தூர எறிந்துவிட்டு தனக்கான ஒன்றை கடும் தேடலுக்குப்பிறகு எடுத்துக்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் செக்குமாட்டு வாழ்க்கையாகவே சாகும்வரை இருக்கும்.//

  மிகச்சரி!

  ReplyDelete
 2. ////எப்படி ஒரு வளர்ந்த குழந்தை டயப்பரைத் துறக்கிற‌தோ, அதுபோல குறைந்த பட்சம் ஒருவன் தனது 30 - 40 வயதுகளில் தன்மனதில் இதுவரை அடுத்தவர்களால் வரையப்பட்ட பிம்பங்களை, திணிக்கப்பட்ட சிந்தனைகளை தூர எறிந்துவிட்டு தனக்கான ஒன்றை கடும் தேடலுக்குப்பிறகு எடுத்துக்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் செக்குமாட்டு வாழ்க்கையாகவே சாகும்வரை இருக்கும்.////

  உண்மை தல ....

  மனம் என்பது பிம்பத்தை கொண்டே வாழ்கிறது ......பிம்பத்தை தூர எறிவது கடினமான ஓன்று தான் ......
  புத்தியின் உச்ச கட்டத்தில் பிம்பத்தை தூர எரிய முடியும் .......ஆனால் புத்தி மட்டுமே கொண்டு வாழும் வாழ்க்கை
  வறட்சியாய் அல்லவா இருக்கும்....?

  ReplyDelete
 3. அட்டகாசம் கல்வெட்டு.

  ReplyDelete
 4. சிந்திக்க தூண்டும் ஒரு அருமையான கட்டுரை..

  ReplyDelete
 5. கல்வெட்டு,

  கதை சொல்லிகளிடமிருந்து விடுபட்டு தனக்கான ஒன்றை கண்டுபிடித்தவனை இன்னும் விடுபடாத யாரும் ஏற்றுக் கொள்வதில்லை. கடுமையான எதிர்ப்புகளை தான் அவன் சந்திக்க வேண்டியிருக்கிறது. (மேட்ரிக்ஸ் படம் போல)

  தனக்கான பிம்பத்தை கண்டுகொண்டவன் தன் வரையில் தன்னை நிறுத்திக் கொண்டு சும்மாயிருப்பதைத் தவிர பெரிதாய் ஒன்றும் செய்ய இயலாது.

  பதிவுக்கு தொடர்பில்லாதது:
  பல சிக்கல்களில் எப்படி உங்கள் நிலையையே நான் எடுத்திருக்கிறேன் என்று வியந்ததுண்டு.

  வெகுசிலவற்றைத் தவிர நாம் ஏறகுறைய ஒரே கருத்துக்களை கொண்டுள்ளோம். எப்படி என்று தெரியவில்லை, புரியவில்லை :-))))

  ReplyDelete
 6. //அடுத்தவன் சொல்லும் கதையின் வழியாகவே நீங்கள் வாழ்க்கையில் சார்பு நிலைகளை எடுத்தால், உங்களுக்கான எதிரியையும் நண்பனையும் அவனே தீர்மானிக்கிறான். நீ என்ன சாப்பிட வேண்டும் , இந்த தீபாவளிக்கு என்ன ஜட்டி போட வேண்டும் எனதைக்கூட விளம்பரங்கள் என்ற ஹைக்கூ கதையாடல்மூலம் உன் மூளையில் திணிக்கிறார்கள்.//

  இது அறியாமை, மிக சிரமம் இந்நிலையில் இருந்து வெளியே வருவது, முக்கியமாக ஆசிய கண்டத்தின் வளர்ப்பே இந்நிலைக்கு காரணம்.

  //தனக்கான பிம்பத்தை கண்டுகொண்டவன் தன் வரையில் தன்னை நிறுத்திக் கொண்டு சும்மாயிருப்பதைத் தவிர பெரிதாய் ஒன்றும் செய்ய இயலாது.//

  இது அறிவு நிலை, மேற்கத்திய வழிமுறை, தன்னையே கேள்வி கேட்டு, தனக்கென ஒரு பிம்பம் கண்டு கொள்வது.

  இதுவும் ஒரு வகைத் தடையே, ஏனெனில் அங்கு மாற்றுக் கருத்துக்களுக்கு வாய்ப்பு குறைவே.

  அதனாலே சிலர், ஏதாவது, ஒரு நிலையிலேயே நின்றுவிடுவதில் சுகம் கண்டு, அதற்கு மேல் சோதனைக்கு உட்படுத்திக் கொள்ள விரும்புவதில்லை.

  எப்பொழுதாவது அதன் அடிப்படை அசைக்கப் படும் பொழுது ஏற்க முடியாமல் அலறிவிடுகிரார்கள்.

  ஞானத்தின் வாசலைத் திறப்பவர்கள், மாற்றுக் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளத் தயக்கம் இருந்தாலும் அறிய விழைகிறார்கள், பகிர்ந்து கொள்கிறார்கள், அவ்வகையில் நல்ல சிந்தனைகளுக்கு இந்தப் பதிவு மிகுந்த வழி செய்யும்.

  மிக்க நன்றி, பகிர்ந்தமைக்கு, நேரமின்மையால், நிறைய எழுத முடிவதில்லை, எண்ணங்களை மட்டும் என் பதிவில் ஏற்றி விடுகிறேன். இது போன்ற பதிவுகளை காணும் பொழுது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது

  நட்புடன், மார்கண்டேயன்.

  ReplyDelete
 7. .

  கும்மி,தனி காட்டு ராஜா,நந்தா,சந்தோஷ்,தகடூர் கோபி,மார்கண்டேயன் மற்றும்
  வால்பையன் வாசித்தமைக்கும் கருத்துப்பகிற்விற்கும் நன்றி!

  =======

  நான் என்ன சொன்னாலும் அது உங்களின் மன‌தில் நான் வரைய முற்படும் சித்திரமாகவே இருக்கும். அதுதான் உண்மை. :-))))

  இருந்தாலும், உரையாடலாக எடுத்துக் கொள்ளும்போது விருப்பமானதை தெரிவு செய்யும் சுதந்திரமும், அனுபவமும் நம்மில் பலருக்கு உள்ளது. அதுதான் நம்மின் பலமும்.

  தினமும் ஒன்றை புதிதாக நான் கற்றுக் கொள்கிறேன். கற்றல் என்பதே அடுத்தவரின் பார்வையின் வழியாக தெரிந்து கொண்டு பின்னர் அங்கேயே தேங்கிவிடாமல் அதைத்தாண்டிச் செல்வதே.

  =============

  ReplyDelete
 8. மார்கண்டேயன்
  //அதனாலே சிலர், ஏதாவது, ஒரு நிலையிலேயே நின்றுவிடுவதில் சுகம் கண்டு, அதற்கு மேல் சோதனைக்கு உட்படுத்திக் கொள்ள விரும்புவதில்லை.

  எப்பொழுதாவது அதன் அடிப்படை அசைக்கப் படும் பொழுது ஏற்க முடியாமல் அலறிவிடுகிரார்கள். //


  உண்மை மார்கண்டேயன். நான் பல இடங்களில் "வெற்றிடத்தில் நிற்கப்பயந்தவனுக்கு சாய்ந்து கொள்ள ஒரு சுவர் வேண்டும்" என்று சொல்லியிருப்பேன். "அசைக்கப் படும் பொழுது ஏற்க முடியாமல் அலறிவிடுகிரார்கள் " என்பதே எனது கருத்தும்.

  .

  ReplyDelete
 9. மனம்

  மனம் என்ற ஒன்று தனியாக இல்லை (மூளை, இதயம், கல்லீரல் போல ஒரு பொருள்). Thought-sphere (எண்ணங்களின் குவியல்) என்று சொல்வார்கள்.

  என்னளவில் ஏற்கனவே சேமிக்கப்பட்ட தகவல்கள் மனம் என்றாகிறது. புதிய தகவல்களை எதிர்கொள்ளும்போது புத்தி என்றாகிறது. ஜென் மொழியில் காலிக்கோப்பையில் டீ ஊற்றும் கதை போன்றதுதான் மனமும் புத்தியும்.

  புதிய தகவல்கள் யாவும் சேமிக்கப்பட்ட பழையதகவல்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தே ஏற்றுக்கொள்ளப்படும். அதனால் வரும் சிக்கல்களே யாவும். காஷ்மீரும் தமிழ்நாட்டைப்போல , ஆந்திராவைப்போல ஒரு மாநிலமே என்று நம்பிக் கொண்டிருக்கும்போது ...அது அப்படியல்ல தனித்துவமான் அரசியல் சிக்கல் உள்ளது என்று சொன்னால் மனம் ஏற்றுக் கொள்ள மறுத்து தேசபக்தி கண்ணாடியில் மட்டும் பார்க்கிறது.

  தேசபக்தி. இந்த பக்தி என்ற வார்த்தையில் இருக்கும் ஒருவித புனிதத்தன்மை கேள்வி கேட்கும் திறனை மழுங்கடிக்கிறது. அதனால்தான் அதே தேசத்தில் அரசாங்கம் செய்யும் அத்துமீறல்களை ஒருசிலரே உணரமுடிகிறது.

  நமக்கான அடையாளைத்தை அடுத்தவன் தீர்மானிப்பதை 30 -‍ 40 வயதிலாவது உணர்ந்துகொண்டால் நல்லது.

  அமிதாப்பச்சனின் தேசப்பற்றும் அருந்ததிராயின் தேசப்பற்றும் இங்கேதான் மாறுபடும்.

  .

  ReplyDelete
 10. தனி காட்டு ராஜா
  //புத்தி மட்டுமே கொண்டு வாழும் வாழ்க்கை வறட்சியாய் அல்லவா இருக்கும்....? //

  வறட்சி என்பதும் யாரின் பார்வையில் என்பதைப் பொறுத்தே. அறிந்து கொள்வதாலும் கேள்விகேட்பதாலும் வறட்சியாய் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.

  சம்பிரதாய சடங்குகளில் கலந்து கொள்வது பற்றிய கேள்வியானால் நிச்சயம் அதுபற்றிப் தனியாக உரையாடலாம். அல்லது தனியான சிந்தனைகளால் சமூகத்தில் இருந்து விலக்கப்படுவதை வறட்சி என்று சொல்கிறீர்களா? நிச்சயம் விரிவாக உரையாடலாம்.

  வறட்சியாய் இருப்பது வாழ்க்கையல்ல.

  .

  ReplyDelete
 11. தகடூர் கோபி

  //வெகுசிலவற்றைத் தவிர நாம் ஏறகுறைய ஒரே கருத்துக்களை கொண்டுள்ளோம். எப்படி என்று தெரியவில்லை, புரியவில்லை //

  தண்ணி தெளித்துவிடப்பட்ட கேசுகளாக இருப்போம் என்று நினைக்கிறேன். :-))))

  நீங்கள் மட்டும் அல்ல இங்கே பின்னூட்டம் இட்டு உள்ள அனைவரும் ஏதோ ஒரு புள்ளியில் இணைகிறோம். மேலும் பலர் இருக்கலாம். அதனாலேயே உரையாடல் சாத்தியப்படுகிறது. நீங்கள் சொல்வதை நானோ அல்லது நான் சொல்வதை நீங்களோ ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற விவாத நோக்கில் இல்லை.

  ஆனால், பேசுபொருள் ஒன்றாய் இருக்கும்போது உரையாடல் சாத்தியப்படுகிறது என்று நினைக்கிறேன்.

  //தனக்கான பிம்பத்தை கண்டுகொண்டவன் தன் வரையில் தன்னை நிறுத்திக் கொண்டு சும்மாயிருப்பதைத் தவிர பெரிதாய் ஒன்றும் செய்ய இயலாது.//

  ம்ம்.. செய்யவேண்டும் என்ற ஒரு நிர்பந்தமும் இல்லை என்றே நினைக்கிறேன். ஆனால், உண்மையில் தனக்கான ஒன்றை சமைத்தவர்களாலேயே அறிவியல் சாத்தியமாயுள்ளது. ஆப்பிள் ஏன் மேலே போகவில்லை என்பது அந்தக்காலத்தில் அபத்தமான ஒன்றாக இருந்து இருக்கலாம். ஆனால் அதன் பயன்கள் எல்லோரையும் அடைந்தது போல, மற்ற மாற்றங்களும் சிந்தனைகளும் என்றாவது ஒருநாள் யாருக்காவது பயன்படலாம். we hope .. ..நீராவியில் இயங்கும் இரயில்கூட பேயாகத்தான் பார்க்கப்பட்டது.

  ஒருவனின் மனதளவில் ஏற்படும் கேள்விகள் யாருக்குப் பயன்படுகிறதோ இல்லையோ அறிவியலுக்குப் பயன்தானே?

  அதுமட்டும் இல்லாமல் தெளிவான சிந்தனைகள் பல நேரம் உற்சாகம் அளிக்கவே செய்கிறது. அதாவது புதிய தேடலைத் தொடங்கவும் , மாறுபட்ட கோணங்களில் பிரச்சனைகளை கையாளவும் உளவியல் ரீதியாக அன்றாட வாழ்க்கையில் பயனளிக்கிறது.

  குழந்தை வளர்ப்பில் எனது அணுகுமுறையும் என் மனைவியின் அணுகுமுறையும் முற்றிலும் வேறானது. என் மனைவி , அவரின் அப்பா அம்மா சொல்லிக்கொடுத்த வழியில் சிந்திக்கத் தொடங்குவார். எனக்கும் அப்படித்தான் புத்தி போகும். ஆனால் பலநாள் பயிற்சிக்குப்பிறகு குழந்தையின் இன்றைய தேவை பழக்கவழக்கம் அடிப்படையில் புதிய அணுகுமுறைகளை தேடிச்செல்கிறேன். அதிக பயனளிக்கிறது.

  .

  ReplyDelete
 12. ம்ம்ம்... இது போன்ற பதிவுகள் பரவலாக வாசிக்கப்பட வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.

  இந்த அடிப்படை புரிதல் ஓரளவிற்கு சரியான வயதில் கிட்டிவிட்டாலே அதற்கான ஓட்டம் ஆரம்பித்துவிடுமென நம்புகிறேன்.

  ஒரு நிலையில் (வயதில்) மிக்க உண்மைகளை உரத்து பேசுவது என்பதே கூட தன் ‘இருத்தலுக்கே’ உலை வைத்துக் கொள்வது போன்றதாகிவிடுகிறது. இன்றைய நிலையில், அருந்ததி ராய்கள் மிடியீவல் டைமில் விட்ச் ஹண்டிங் செய்ததினைப் போன்ற முறையில் வேட்டையாடத் தகுந்த நபர்களில் ஒருவராகிப் போனது, அவர்களின் அதீதமான ‘உண்மை’ பேசும் குணத்தை கொண்டே என்றே கருதுகிறேன்.

  விட்ச் ஹண்டிங் கூட இப்படி மனக் கிடக்கைகளை பிறரும் சிந்திக்கும்மாறு வெளிக் கொணர்ந்தவர்களை, வேட்டையாடி முடித்ததின் கதைதானே என்று இந்த நாளில் எண்ணச் செய்கிறது. தனியாக விரித்து ஒரு பதிவு எழுதலாமோ என்று தோன்றுகிறது.

  நன்றி, கல்வெட்டு!

  ReplyDelete
 13. உங்க பதிவிற்கான இணைப்பை என்னோட புது இடுகையில் கொடுத்திட்டேன்... வாசிக்கட்டும் மக்கள்ஸ்னு!

  கலவை: அருந்ததி ராய்-கரன் தாபர்/காஃப்கா - (Metamorphosis-ஈ புக்)

  ReplyDelete
 14. //பாக்சைட் தாதுவை விற்க பங்காளியைக் கொள்ளலாம். அவன் நிலத்தை அபகரிக்கலாம். அவனை சொந்த நாட்டில் அகதியாக்கலாம்.ஆனால் எவன் இந்த உண்மையைச் சொல்கிறானோ அவன் தேசத்துரோகி. தேசம் என்பதில் அவர்கள் இல்லையா?//

  நச் கேள்வி

  ReplyDelete
 15. என்ன சொல்வதென்று தெரியவில்லை.. மிக நல்ல பதிவு. ஆனாலும் இதெல்லாம் யார் மனதுக்குள் ஏறுமோ .. சுற்றிலும் முயன்று தோல்வி கண்டதாக நினைவு. எல்லோரையும் 'தண்ணி தெளிச்சு விட்டா நல்லா இருக்கும். முதலில் கொடுத்த மீன்/ கரடி கதை நல்லா இருக்கு. நல்ல வாத்தியார் மிஸ்ஸிங்!!

  ReplyDelete
 16. //நீங்கள் மட்டும் அல்ல இங்கே பின்னூட்டம் இட்டு உள்ள அனைவரும் ஏதோ ஒரு புள்ளியில் இணைகிறோம்.//

  தேடல் என்ற புள்ளியில் இருக்குமோ :)

  //தண்ணி தெளித்துவிடப்பட்ட கேசுகளாக இருப்போம் என்று நினைக்கிறேன். :-))))//

  :))

  //தனியான சிந்தனைகளால் சமூகத்தில் இருந்து விலக்கப்படுவதை வறட்சி என்று சொல்கிறீர்களா? நிச்சயம் விரிவாக உரையாடலாம்.//

  இதை தான் சொல்ல வருகிறேன் தல ...

  உதாரணத்துக்கு ஐன்ஸ்டீன் சித்திரங்களை எல்லாம் விட்டவர் ...கடந்தவர் என்று சொல்லலாம் ....அவர் அனைத்தையும் ஆற்றலாகவே பார்த்தார் .......

  ஆனால்...அவருடைய கடைசி காலத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு " அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் நீங்கள் Scientist ஆக ஆசை படுவீர்களா என்று கேட்டதற்கு ....அவர் "நான் ஒரு Plumber ஆகவே ஆசை படுகிறேன் " என்று சொன்னதாக கூறப்படுகிறது .......

  இது வறட்சியை தானே காட்டுகிறது :)


  //அறிந்து கொள்வதாலும் கேள்விகேட்பதாலும் வறட்சியாய் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.//

  அவசியம் இல்லை தான் தல ....ஒருவேளை இது வறட்சியை நோக்கி தான் கொண்டு செல்லுமோ என நான்
  நினைக்கிறேன் :)

  ReplyDelete
 17. புரிய கடினமான கருத்தை எளிய கதை மூலம் கையாண்ட விதம் அருமை. வாழ்த்துகள்

  ReplyDelete
 18. ச்யோவ்ராம் சுந்தர் டுவிட்டரில் சொன்ன கருத்து இது. அவரின் அனுமதியுடன் இது குறித்து உங்கள் கருத்தை அறிய இங்கே பதிகின்றேன்.

  ///

  http://twitter.com/jyovramsundar/status/29261972143

  jyovramsundar
  மேலோட்டமாகப் பார்த்தால் சரியாகவே தோன்றும் கல்வெட்டு மாதிரியான ஒரு தர்க்கபூர்வமான மொக்கையை யாராவது பார்த்திருக்கிறீர்களா?

  ///

  ReplyDelete
 19. இது பின்னுட்ட தொடர்ச்சிக்காக

  ReplyDelete
 20. மேலே குறிப்பிடப்பட்ட ட்விட்டர் விவாதத்தைப் பின் தொடர்ந்து இங்கே வந்தேன். பதிவு சிறப்பாக உள்ளது. நிச்சயமாக மேலே வைக்கப்பட்ட விமர்சனம் இந்தப் பதிவுக்கோ அல்லது பதிவருக்கோ பொருந்துவதாக நான் கருதவில்லை. கல்வெட்டு இத்தகைய தாக்குதல்களையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து எழுத வேண்டும்.

  ReplyDelete
 21. //jyovramsundar
  மேலோட்டமாகப் பார்த்தால் சரியாகவே தோன்றும் கல்வெட்டு மாதிரியான ஒரு தர்க்கபூர்வமான மொக்கையை யாராவது பார்த்திருக்கிறீர்களா?.//


  உடன் படும் நண்பர்களை விட முரண்படும் நண்பர்களே நமக்கு நிறைய கற்று தருகிறார்கள் என்பது என் கருத்து!

  ReplyDelete
 22. TBCD ,

  கேள்வி என்றால் பதில் சொல்லலாம். அதாவது எது அவர்கள் பார்வையில் தவறு என்று குறிப்பிட்டு அதற்கான கேள்வியைக் கேட்கும் பட்சத்தில்.

  விமர்சனம் என்பது ஒரு கருத்தின் மீது தனது சொந்தப்பார்வையை வெளிப்படுத்துவது. அது பதிலை நோக்கி கேட்கப்பட்ட கேள்வி அல்ல.

  பொது வெளியில் பேசப்படும் ஒன்றிற்கு யாரும் எந்த விமர்சனமும் செய்யலாம். விமர்சிப்பதும் விமர்சிக்கப்படுவதும்தான் வலைப்பதிவின் கட்டற்ற சுதந்திரம்.

  மதுரை மீனாட்சி கோவிலைக் காணா பல மேற்கு உலகினர் வருவார்கள். படம் பிடிப்பார்கள். ஆனால், அதன் அருகே பூ கட்டி விற்கும் பாட்டிக்கு அது கோவில் ஒரு பொருட்டு அல்ல.

  எனது கருத்துகள் எனக்கு முக்கியமாக இருக்கலாம். மற்றவர்களுக்கு அது மொக்கையாக இருப்பதில் ஆச்சர்யம் இல்லை. இயேசுவாகட்டும் , புத்தனாகட்டும், ஒபாமவாகட்டும் ...அனைவராலும் ஏற்றுக்கொள்ளும் ஒன்றைச் சொல்லிவிட முடியாது. அதுதான் வாழ்க்கையைச் சுவராசியமாகவும் ஆக்குகிறது.

  ***
  Voice on Wings , TBCD, வால்பையன் நன்றி

  .

  ReplyDelete
 23. தருமி
  //கரடி கதை நல்லா இருக்கு. நல்ல வாத்தியார் மிஸ்ஸிங்!!//

  வாத்தியாரிடம் இருந்தே வாத்தியார் பட்டமா?
  நன்றி பேராசான்.

  **

  anantharaj

  நன்றி

  **
  தனி காட்டு ராஜா
  //ஒருவேளை இது வறட்சியை நோக்கி தான் கொண்டு செல்லுமோ என நான்
  நினைக்கிறேன் //

  சமரசங்கள் கொள்கைகள் வறட்சி குறித்து நிறையவே பேசலாம். அதை ஒரு தனிப்பதிவாகப் பேசலாம்.

  நன்றி.

  .

  ReplyDelete
 24. நல்ல கருத்து ... அனைத்துமே கற்பிதம்தான் அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால் இதே கற்பிதத்தை நமக்கு முன் வரும் எல்லா பார்வைகளிலும் வைக்க வேண்டும்-வெகு ஜன ஊடகங்கள் வைக்கும் பார்வைகளிலும், எதிர் பார்வைகளிலும். உண்மை என்பது இரு சாராருக்கும் இடையில் இருப்பதற்குத்தான் சாத்தியம் அதிகம்.

  இதில் முக்கியமான ஒன்று எவரின் கருத்தையும், பார்வையும் நம்முடைய கற்பிதத்தை அசைக்கிறது என்ற காரணத்திற்காக முழுதுமாக ஒதுக்கி தள்ளும் மனோபவத்தை விட வேண்டும்.

  ReplyDelete
 25. சிந்திக்கவைத்த இடுகை...

  ReplyDelete