Thursday, September 03, 2015

முற்போக்கு என்பது எது?

மிழில் பின்நவீனத்துவம் என்ற‌ ஒரு வார்த்தை புழக்கத்திற்கு விடப்பட்ட காலத்தில், அதை மொழி பெயர்த்தவர்கள்  Postmodernism என்பதை அப்படியே தமிழ்ப்படுத்திவிட்டார்கள் என்று நினைக்கிறேன். இது ஏதோ "முன்நவீனத்துவம் -- நவீனத்துவம் --- பின்நவீனத்துவம்" என்ற தொடர் பகுப்புபோல் புரிய வைக்கும்.  சரியாக இருக்க வேண்டும் என்றால் , "நவீனகாலத்திற்கு பிறகு" அல்லது "நவீனத்துவத்திற்கு பிறகான" என்றுதான் இருக்க வேண்டும். மாடர்ன் என்ற புள்ளியில் இருந்து அதை விமர்சித்து (கலை பண்பாட்டு வழிகளில்) எழுந்த ஒரு கோட்பாடு / இயக்கம்தான்  Postmodernism. ஆனால் அப்படியான ஒரு அர்தத்தை தமிழ் வார்த்தை "பின்நவீனத்துவம்" கொடுக்கவில்லை எனக்கு.

இப்படி பல சிக்கல்கள் உண்டு . பேசும் / எழுதும் வார்த்தைகள் உண்மையான பொருளை கடத்திவிடமுடியாது. அதுவும் மொழிபெயர்ப்புகளில் பெரும் சிக்கல்.

முற்போக்கு என்பது என்ன?

இதன் உடனடி அர்த்தம்,  இருக்கும் நிலையில் இருந்து முன்னோக்கிச் செல்வது.  அதாவது 2001 ல் இருந்தால் 2002 க்குச் செல்வது போன்றது.  தவறு என்று 2001 ல் அறியப்பட்ட ஒன்றை 2002 க்கு எடுத்துசெல்லாமல் , சுமைகளை உதறி முன்னேறுவது.

எது சுமை என்பதில் வேறுபாடுகள் வரும்போது ஒருவர் நினைக்கும் முற்போக்கு என்பதும் அடுத்தவர் நினைக்கும் முற்போக்கு என்பதும் வேறு வேறாகிவிடும். மதப் புத்தகங்களை எடுத்துக்கொள்வோம் அதில் "இந்த வரி தவறு இந்தக் காலத்திற்கு உதவாது" என்று சொல்லி அதை அகற்ற மாட்டார்கள். அதே புத்தகம் அச்சு மாறாமல் அடுத்த காலத்திற்கும் பயணித்துக்கொண்டு இருக்கும். இங்கே இதை யாரும் சுமை என்று  கருதவில்லையாதலால், அதைவிடாமல் எடுத்துக்கொன்டு போகிறார்கள்.

எது சுமை? என்பதை தனி ஒருவன் அவனுக்காக முடிவு செய்கிறான் (செய்ய வேண்டும்). எதை அடுத்த சந்ததிக்கு கடத்தலாம் என்பதையும் அவன்தான் முடிவு செய்ய வேண்டும். சில புனைக்கதைகளை (Fiction) கதைகள் என்று சொல்லி கடத்திக்கொண்டே இருக்கலாம் தவறே இல்லை. ஆனால் இன்றும்,  "உலகம் தட்டை" (Non-Fiction) என்ற தகவலை கடத்திக்கொண்டே இருந்தால் அதுதான் பிற்போக்குத்தனம்.  ஆனால் இன்றும் உலகம் தட்டை என்று நம்புபவர்களுக்கு அது பிற்போக்குத்தனம் இல்லை.

எனவே,  ஒருவர் பிற்போக்கா இல்லையா என்பது , அவரைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும்,  அவர்களின் சுமை குறித்த புரிதல்களின் பேரில் மாறுபடும் ஒன்று.

.
Picture courtesy: www.artafrica.info

No comments:

Post a Comment