Thursday, October 20, 2016

அமெரிக்க தேர்தல்: நவம்பர் 2000 - அப்படி என்ன அதிசயம் நடந்தது ஃபுளோரிடாவில்?


டொனால்ட் ட்ரம்ப் அவர்களின் நேற்றைய "அக்டோபர் 19,2016" அதிபர் தேர்தல்  மூன்றாவது பட்டிமன்றப் பேச்சில், சொன்ன விசயங்களிலேயே முக்கியமானதும், இன்று பல நியூசு மீடியாக்களுக்கு சோறு போட்டுக்கொண்டு இருப்பதுமான முக்கிய செய்தி இதுதான்.

"ஒருவேளை நீங்கள் தோற்கும் ப‌ட்சத்தில், தேர்தல் முடிவை ஏற்று, வெற்றி பெற்றவரை வாழ்த்தி, அடுத்த அரசாங்கம் அமைய துணையாய் இருப்பீர்களா?" என்ற கேள்விக்கு ட்ரம்ப் அவர்களின் பதில் " அது நடக்கும் போது பார்ப்போம், நான் அதுவரை உங்களை suspense லேயே வைத்து  இருப்பேன்" என்றார்.

இப்போது அந்த 'பேனை'ப் பெருமாளாக்கி , ஒரு ஆழ்ந்த அறிவார்ந்த மொக்கை , நேசனல் விவாதத்தில் கொண்டுவந்து விட்டிருக்கிறது.

அந்த இமாலயக் கேள்வியின் சாராம்சம் இதுதான்

1) 2016 அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோற்றால் என்ன செய்வார்...
2) அவர் தேர்தலை எதிர்த்து வழக்குப் போட முடியுமா?
3) 2000 ஆண்டு அதிபர் தேர்தலில் ஃபுளோரிடாவில் அப்படி நடந்ததே?

தேர்தலில் ட்ரம்ப் தோற்றால் என்ன செய்வார்?

  1. அது அவருக்கே தெரியாது. 
  2. ஒரு தொலைக்காட்சி ஆரம்பித்து மேலும் பல சண்டைகளை வளர்க்கலாம். அவரின் ஆதரவாளர்களை வைத்து ஏதேனும் ஒரு இயக்கத்தை ஆரம்பிக்கலாம். 
  3. ஓயாது பேசிக்கொண்டே, ட்விட்டரில் வம்பிழுத்துக்கொண்டும், ரேடியோ நிகழ்ச்சிகளில் பேசிக்கொண்டும் இருக்கலாம். 
என்ன செய்யலாம் என்பதைவிட என்ன செய்ய முடியாது என்று பார்ப்போம்.

அவர் 2016 அதிபர் தேர்தலில் என்னை ஏமாற்றிவிட்டார்கள் என்று அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்குப்போட முடியாது. வேண்டுமானால் நேரத்தைப் போக்க சில வழக்குகளை போட்டுவைக்கலாம்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தலை நடத்துவது மாநிலம். ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு விதிகளைக் கொண்டது. உதாரணத்திற்கு குறைந்த அளவே வித்தியாசத்தில் இவர் ஒரு மாநிலத்தில் தோற்றால், அந்த மாநிலம் மறு எண்ணிக்கைக்கு உத்தரவிடலாம்.ஏன் மறு தேர்தலேகூட நடத்தலாம். என்ன செய்ய வேண்டும்? எப்போது செய்ய வேண்டும் என்று மாநிலத்திற்கு மிகத் தெளிவான விதிகள் இருப்பதால், இவர் ஒன்றும் செய்துவிட முடியாது.

பலர் 2000 ஆண்டு அதிபர் தேர்தலில் ஃபுளோரிடாவில் நடந்த குழ‌ப்பங்களை இதனோடு ஒப்பிடுகிறார்கள். என்ன கொடுமை இது? ட்ரம்ப்பிடம் கேட்ட கேள்விக்கும், 2000 ஆண்டு அதிபர் தேர்தலில் நடந்த ஃபுளோரிடா குழப்பங்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது.

2000 ஆண்டு அதிபர் தேர்தலில் ஏன் அமெரிக்க உச்ச நீதிமன்றம் தலையிட்டது என்பதை புரிய முயற்சித்தால் நமது மண்டை உச்சி பிச்சிக்கும். இருந்தாலும் பிச்சுக்குவோம் வாங்க.

நவம்பர் 7, 2000:
அமெரிக்க அதிபர் தேர்தல் எல்லா மாநிலங்களிலும் நடக்கிறது.

நவம்பர் 8, 2000:
எல்லா மாநிலங்களும் அவர்களின் எலக்டரல் ஓட்டுக்களை கட்டாக அனுப்பிவிட்டார்கள்.

ஃபுளோரிடா மாநிலத்தில் ரிபப்ளிகன் கட்சி வேட்பாளரின் வெற்றி மிக மிக குறைந்த சதவீத ஓட்டில் வந்து நிற்கிறது.

ஃபுளோரிடா தேர்தல் அதிகாரி/செகரட்டரி ரிபப்ளிகன் கட்சி வேட்பாளர் George W. Bush48.8 சதவீத ஓட்டுகளை வாங்கியதாக‌ அறிவிக்கிறது.

மொத்த வாக்கில் அவர் 1,784 ஓட்டுகளே எதிர் தரப்பு டெமாக்ரடிக் வேட்பாளர் Al Gore ஐ விட அதிகம் எடுத்து இருந்தார்.

வெற்றி பெற்ற ஓட்டு (The margin of victory ) 0.5 % க்கும்குறைவானதே என்பதால், ஃபுளோரிடா மாநில அப்போதைய சட்டப்படி , வாக்குகளின் மறு எண்ணிக்கைக்கு உத்தரவிடப்படுகிறது. இதை " automatically trigger state-funded election recounts" என்று சொல்வார்கள். அதாவது மறு எண்ணிக்கை வேண்டும் என்று யாரும் முறையிட தேவையே இல்லை. அது பாட்டுக்கு செய்யப்படும் யார் கேட்டாலும் கேட்காவிட்டாலும். அது அந்த மாநில சட்டம்.
http://www.flsenate.gov/Laws/Statutes/2012/102.141

நவம்பர் 10, 2000:
ஃபுளோரிடா மாநில சட்டப்படி யாரும் கேட்கமலேயே நடந்த மறுவாக்கு எண்ணிக்கையில் (automatically trigger state-funded election recounts )  அடுத்த ஆச்சரயம் இருந்தது. ஆம் இம்முறை , வாக்கு வித்தியாசம் 1,784 ல் இருந்து 327 ஆக குறைந்தது.

இப்படி நடந்த மறுவாக்கு எண்ணிக்கையில், 18 கவுண்ட்டிகளில் ( கவுண்ட்டி , மாநிலத்தில் இருக்கும் மாவட்ட அமைப்பு போன்றது) சட்டப்படி செய்யவேண்டிய "எந்திரத்தின் மூலம் வாக்கு எண்ணுவது"  கடைபிடிக்கப்படவில்லை என்ற குண்டை Jeffrey Toobin என்ற ஒரு அரசியல்/சட்ட விமர்சகர் கொளுத்திப் போடுகிறார்.

தோற்றதாகக் கருதப்படும் டெமாக்ரடிக் கட்சியின் வேட்பாளர்  'Al Gore'  அதுகுறித்து எந்த‌ கேள்வியும் கேட்கவில்லை வழக்கும் போடவில்லை. அமைதியாகவே இருந்தார். அவர் அப்போதைய அமெரிக்க துணை அதிபரும்கூட. ஆனால் அவர் , 4 கவுண்ட்டிகளில் மட்டும் "மறுபடியும் ஒரு முறை கையால் ஓட்டுகள் எண்ணப்படவேண்டும்" என்று வேண்டுகோள் வைத்தார். ஃபுளோரிடா சட்டப்படி அது சரியானது. அவர் கேட்டதற்கு காரணம் , அந்த கவுண்டிகளில் அவருக்கு அதிக வாக்குகள் ஏற்கனவே இருந்தது. கையால் வாக்குகளை எண்ணினால் , தவறுகள் களையப்பட்டு ,அவரின் மொத்த வாக்குகள் கூடலாம் என்று நம்பியிருக்கலாம் அவர்.

அந்த நான்கு கவுண்ட்டிகளும் (Volusia, Palm Beach, Broward and Miami-Dade, ) இவரின் விண்ணப்பத்தை ஏற்று கையால் ஓட்டு எண்ணும் வேலையை ஆரம்பித்தார்கள்.

இதற்கு இடையில் அதே ஃபுளோரிடா மாநில இன்னொரு சட்டப்பிரிவு குறுக்கே வருகிறது. அதன்படி ,தேர்தல் நடந்த 7 நாட்களுக்குள் , மாநிலத்தில் உள்ள எல்லாக் கவுண்டிகளும் ஓட்டு எண்ணிக்கையை முடித்து, இறுதி அறிக்கையை ஃபுளோரிடா மாநில செகரட்டரய்க்கு Florida Secretary of State க்கு அனுப்பி வைக்கவேண்டும் என்பது சட்டம்.

தேர்தல் நடந்த தேதி நவம்பர் 7, 2000. அதில் இருந்து 7 நாட்களுக்குள் என்றால் , அனைத்து கவுண்ட்டிகளும் நவம்பர் 14,2000 க்குள் ஓட்டு எண்ணிக்கையை Florida Secretary of State க்கு அனுப்பி வைக்கவேண்டும்.

கையால் ஓட்டுக்களை எண்ண ஆரம்பித்த கவுண்டிகள்,  கையை ஊன்றி கரணமடித்தாலும், இந்த நவம்பர் 14,2000 தேதிக்குள் ஓட்டுகளை எண்ணி முடிக்க முடியாது.

கையால் ஓட்டு எண்ணக் கோரிக்கை வைக்கலாம் என்ற ஒரு சட்டம், அதே சமயம் ஓட்டு எண்ணிக்கையை தேர்தல் நடந்த 7 நாட்களுக்குள் மாநில செகரட்டரிக்கு கவுண்டிகள் அனுப்பி வைக்க வேண்டும் என்ற ஒரு சட்டம். இப்படி ஃபுளோரிடா மாநிலம் அது எழுதிய சட்டங்களின் சந்துகளுக்குள் மாட்டிக்கொண்டது.

நவம்பர் 14, 2000 இறுதிநாள் வந்துவிட்டது.
கையால் ஓட்டை எண்ண ஆரம்பித்த நான்கு கவுண்டிகளில் ஒன்றான Volusia கவுண்ட்டி வெற்றிகரமாக ஓட்டுகளை எண்ணிவிட்டது. இறுதிநேரம் முடிந்த நிலையில் மாநிலத்தில் உள்ள மூண்று க‌வுண்ட்டிகள் (Palm Beach, Broward and Miami-Dade,  )  தவிர எல்லாக் கவுண்ட்டிகளும் அவர்களின் ஒட்டு எண்ணிக்கையை மாநில செகரட்டரியிடம் சமர்ப்பித்து விட்டு, வீட்டுக்கு போய்விட்டார்கள் அப்போது நேரம் , மாலை 5 , நவம்பர் 14,2000.

இன்னும் ஆமை வேகத்தில் கையால் ஓட்டுகளை எண்ணிக்கொண்டிருக்கும் மற்ற மூன்று கவுண்ட்டிகளின் வாக்கை என்ன செய்வது? அங்கேதான் சனிபகவான் வந்து நிக்கிறான் . இதற்கும் ஃபுளோரிடா சட்டம் ஒரு தீர்வைச் சொல்கிறது. அதாவது,  மாநில செகரட்டரி , உண்மைகளையும், சூழைநிலைகளையும் ( considering all attendant facts and circumstances )ஆராய்ந்து இறுதி தேதிக்குப் பிறகுகூட (மாலை 5 மணி , நவம்பர் 14,2000 க்குப் பிறகும்) மாநில அளவிலான ஓட்டுக்களில் கவுண்டி ஓட்டுகளை சேர்த்துக்கொள்ளலாம் என்பதே.

ற்கனவே சிரிப்பாய் சிரிக்கப்பட்டு கொண்டு இருக்கும் ஃபுளோரிடாவின் சட்ட சந்துகளில் மாட்டிக்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் தேர்தல், இதனால் மேலும் குழப்பமடைகிறது. ஃபுளோரிடாவில் என்னதான் நடக்கிறது என்று ஒட்டு மொத்த அமெரிக்காவும் பார்க்க ஆரம்பித்து விட்டன. ஏன் என்றால் இன்னும் யார் அதிபர் என்பது முடிவாகாமல் , ஃபுளோரிடாக்காக காத்துக்கொண்டு உள்ளது அமெரிக்கா.

பல வழக்குகள்:
இப்படி ஓட்டு எண்ணிக்கை மாறி மாறி நடப்பதை எதிர்த்தும், ஆதரித்தும் பலர் மாநில அளவில் மற்றும் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார்கள். சிலர் 'மாநிலம் முழுமைக்கும் கையால் வாக்கு எண்ண வேண்டும்' என்றார்கள். சிலர் 'போதும் நிறுத்திக்குவோம் நாங்கள் வெற்றியில் இருப்பதால், மறு எண்ணிக்கை கூடாது' என்று வழக்குப் போட்டார்கள். இப்படி தான் வகுத்த பல சட்டப்பிரிவுகள் தன்னைச் சுற்றி நின்று கொட்டமடிக்க,  இடியாப்பச் சிக்கலுக்குள் போய்விட்டது ஃபுளோரிடா மாநிலம். மாநிலத்தை , காக்கும் கடமை உச்ச நீதிமன்றதிற்கு வருகிறது.

ச்ச நீதிமன்றத்திலும் பல வழக்குகள் பலரால் தொடரப்பட்டது இந்த விசயத்தில். உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடமே வேறு வேறு கருத்துகள். கடைசியாக உச்ச நீதிமன்றம் இப்படி நாட்டமை தீர்ப்பைச் சொல்கிறது.

அமெரிக்க உச்ச நீதிமனறம் 9 தலைமை நீதிபதிகளைக் கொண்டது. அதில் 5 பேர் மட்டுமே ஆதரிக்க (மற்ற‌ 4 பேர் இதை ஏற்கவில்லை) பெரும்பான்மை நீதிபதிகளின் கருத்தாக, கீழ்க்கண்ட தீர்ப்பை ஃபுளோரிடா மாநிலத்திற்கு உத்தரவிட்டது.


  • ஃபுளோரிடா நீதிமன்றம், சில கவுண்ட்டிகளில் மட்டும் வாக்கு மறு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டு/அனுமதித்து அமெரிக்காவின் சட்டமான 14 சட்டச் சேர்க்கையை Fourteenth Amendment (violated the equal-protection guarantees of the Fourteenth Amendment.  ) மீறிவிட்டது.
  • ஏற்கனவே நடத்தப்பட்ட மறு எண்ணிக்கை முடிவை கடைசி நேரம் (தேர்தல் முடிவை அறிவிக்கும் நேரம்) வரை தாமதப்படுத்த வேண்டியது இல்லை. ஏற்கனவே இருக்கும் முடிவை இறுதி முடிவாக அறிவித்து விடவும்.

இன்று பல பல்கலைக்கழகங்களில் இந்த வழக்கு ஒரு பாடமாக, இன்னும் விவாதிக்கப்பட்டுக்கொண்டே உள்ளது.

நீதி என்னவென்றால், அண்ணன் ட்ரம்ப் இப்போது சொல்லியுள்ள உங்களை சசுபென்ஃசில் வைப்பேன் என்பது 2000 ஆண்டு நடந்த புளோரிடா சட்டக்குழப்பங்களுடன் ஒப்பிடவே முடியாத ஒன்று. ஒருவேளை நம்மூர் பழமொழிப்படி, "அத்தைக்கு மீசை முளைக்கட்டும் முதல்ல, அப்பால பார்க்கலாம் சித்தப்பாவா அழைப்பதா என்று" ட்ரம்ப் சொல்லுகிறாரோ என்னவோ.

விக்கிகளில் மூலம் நான் புரிந்து கொண்டது தூசி அளவு. அதற்கே தாவு தீர்ந்துவிட்டது. இன்னும் படித்தால் நான் பைத்தியக்காரனாகிவிடுவேன் என்று சொல்லி, நீங்களும் உங்கள் உச்சி மண்டையை பிய்த்துக்கொள்ள‌ ஆசிர்வதிக்கிறேன்.

இன்னும் பல சட்ட சிக்கல்கள் கொண்டது இந்த ஃபுளோரிடா பஞ்சாயத்து. 9 ல் 4 நீதிபதிக‌ள் ஏற்றுக்கொள்ளாத தீர்ப்பு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆம் பெரும்பான்மை வெல்லும். நேரமின்மை கருதி இதை இப்படியே விட்டுவிட்டு நமது எலக்டர்களின் ஆராய்ச்சியைத் தொடருவோம்.

...தொடரும்

தொடர்பான பதிவுகள்:
(1) அமெரிக்கா அதிபர் தேர்தல் 2016 : களத்தில் உள்ளவர்களும் 12 ஆவது சட்ட பிற்சேர்க்கையும்
http://kalvetu.balloonmama.net/2016/10/2016-12.html

(2) அமெரிக்காவில் அதிபரைத் தேர்ந்தெடுப்பது மக்கள் அல்ல. மாநிலங்களால் நியமிக்கப்படும் எலக்டர் என்பவர்களே!
http://kalvetu.balloonmama.net/2016/10/blog-post_18.html

(3) அமெரிக்காவில் அதிபர் தேர்தல்: யார் இந்த எலக்டர்கள் (Electoral College) ?
http://kalvetu.balloonmama.net/2016/10/electoral-college.html

(4) அமெரிக்க அதிபர் தேர்தல்: வாங்க தமிழ்நாட்டில் அமெரிக்க அதிபர் தேர்தலை நடத்தலாம்

http://kalvetu.balloonmama.net/2016/10/blog-post_20.html

.

No comments:

Post a Comment