Thursday, October 20, 2016

அமெரிக்க அதிபர் தேர்தல்: வாங்க தமிழ்நாட்டில் அமெரிக்க அதிபர் தேர்தலை நடத்தலாம்

மெரிக்க அதிபர் தேர்தலில், சில மாநிலங்களில் 'எலக்கடரின்' பெயர்கள் அதிபர் வேட்பாளரின் பெயருடன் வாக்குச்சீட்டில் அச்சிடப்பட்டு இருக்கும், சில மாநிலங்களில் இருக்காது. எது எப்படியோ, ஒவ்வொரு மாநிலமும்  அந்தந்த‌ மாநிலத்திற்கான எலக்டர்களை , 'மக்களின் நேரடி வாக்கு'கள் மூலமே தேர்ந்தெடுக்கிறது. இந்த எலக்டர்கள், பிறகு அதிபரை தேர்வு செய்வார்கள். Official President Election Ballot - STATE OF MARYLAND, BALTIMORE CITY

ஒரு மாநிலம் அதன் எலக்டர்களை எப்படி தேர்வு செய்கிறது என்பதை, ஒரு உதாரணத்தின் மூலம் பார்க்கலாம்.

 "வடக்கு கரோலைனா" மாநிலத்தை எடுத்துக்கொள்வோம். இந்த மாநிலத்திற்கு என்று நிர்ணயிக்கப்பட்ட‌ மொத்த‌ எலக்டர் (எலக்டரல் ஓட்டுகள்) எண்ணிக்கை 15.

2 (செனட் பதவி) + 13 ( கங்கிரச‌னல் பதவிகள்) = 15 எலக்டர் (எலக்டரல் ஓட்டுகள்)

இந்த 15 எலக்டரல் ஓட்டுக்களையும் பெற்றுவிட, 'வடக்கு கரோலைனா' மாநிலத்தில் போட்டியிடும் 'டெமாக்ரடிக்' மற்றும் 'ரிபப்ளிகன்' கட்சிகள் , அவர்கள் கட்சி சார்பாக,  யார்? யார்? எலக்டராக‌ இருப்பார்கள் ( Potential Electors ) என்று அவர்களுக்கான 15 பேர் கொண்ட பட்டியலை தேர்தலுக்கு முன்னரே மாநில அரசிடம் கொடுப்பார்கள்.

மாநில வாக்குச் சீட்டில், இரண்டு கட்சி சார்பாகவும் ( வேறு சில கட்சிகளும் இருக்கலாம்) போட்டியிடும் "அதிபர்" மற்றும் "துணை அதிபர்" பெயர் அச்சிடப்பட்டு இருக்கும். வாக்காளர் , இதில் யாரோ ஒரு கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்கிறார்.

அவ்வளவுதான் தேர்தல் முடிந்து விட்டது. அடுத்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

மாநில அளவிலான எல்கடர் தேர்வு கணக்கு (உதாரணம்/மாதிரி/Sample/Assumption)
https://drive.google.com/file/d/0BxBcI4tKJgizLV9FcVZIYW9LcGc/view



2010 ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 'வடக்கு கரோலைனா' மாநில மக்கள் தொகை "9,535,483". (2010 அமெரிக்க சென்சஃச் கணக்கின் அதிகாரபூர்வ எண்ணிக்கை) . இந்த மக்கள் தொகையில் பதிவு செய்துள்ள /வாக்களிக்கும் தகுதியுள்ளவர்களின் எண்ணிக்கை "9,000,000" என்று வைத்துக்கொள்வோம். ( இது எடுத்துக்காட்டிற்காக நான் எடுத்துக்கொட ஒரு மாதிரி assumption/ sample எண்ணிக்கை மட்டுமே).

நடைபெறும் 2016 அதிபர் தேர்தலில் இந்த "9,000,000" மக்களும் வாக்களிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதாவது மாநிலத்தில் பதிவான வாக்குகள் "9,000,000".

வாக்குகள் எண்ணப்பட்டு , டெமாக்ரடிக் கட்சி "5,000,000" வாக்குகளையும், ரிபப்ளிகன் கட்சி "4,000,000" வாக்குகளையும் பெறுவதாகக் கொள்வோம். இந்த மாநிலத்தில் இப்படி மக்கள் செலுத்திய வாக்கை "பாப்புலர் ஒட்டுகள்" ( popular vote ) என்று சொல்வார்கள். இப்படியாக, '2016 அதிபர்' தேர்தலில் "வடக்கு கரோலைனா" மாநிலத்தில் 'டெமாக்ரடிக் கட்சி' 5,000,000 'பாப்புலர் ஒட்டுகளையும்', 'ரிபப்ளிகன் கட்சி' 4,000,000 'பாப்புலர் ஒட்டுகளையும்' பெற்றுவிடுகிறது என்று வைத்துக்கொள்வோம்.

மாநிலம் எப்படி எலக்டர்களை தேர்வுசெய்கிறது?

அமெரிக்காவில் "வடக்கு கரோலைனா" மாநிலம் உட்பட , 48 மாநிலங்கள் 'வெற்றி பெற்றவருக்கே அனைத்தும்' ( winner-takes-all system ) என்ற நடைமுறையப் பின்பற்றுகின்றன. அதாவது எந்தக் கட்சி மாநில அளவில் (ஒட்டுமொத்த மாநிலம்) அதிக‌ ஓட்டுகளை பெறுகிறதோ, அந்தக் கட்சிக்கே மாநிலத்தின் அனைத்து எலக்டர்களையும் வழங்குவது என்பது. அதன்படி இங்கே 5,000,000 பாப்புலர் ஒட்டுகளை பெற்று 'டெமாக்ரடிக் கட்சி' வெற்றி பெற்று இருப்பதால்,  'வடக்கு கரோலைனா' மாநில அரசாங்கம், அந்த கட்சி சார்பாக கொடுக்கப்பட்டுள்ள, 15 எலக்டர்களையும் அங்கீகரித்து சான்றிதழ் கொடுக்கும்.

இப்படியாக டெமாக்ரடிக் கட்சி ஏற்கனவே சமர்ப்பித்துள்ள 15 ( Potential Electors )  களும் , மாநிலத்தின் அதிகாரபூர்வ எலக்கடராக (State appointed / certified ) ஆக நியமிக்கப்படுகிறார்கள்.

"வெற்றி பெற்றவருக்கே அனைத்தும்" ( winner-takes-all system )தவிர வேறு என்ன நடைமுறைகள் உள்ளது?

அமெரிக்கா முழுக்க முழுக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் அரசாங்கம். எப்படி ஒரு மாநிலம் அதன் எலக்டர்களை தேர்வு செய்கிறது என்பது, அந்த மாநிலத்தின் உரிமை. 50 மாநிலங்களில் 48 மாநிலங்கள்  "வெற்றி பெற்றவருக்கே அனைத்தும்" ( winner-takes-all system )முறையைப் பின்பற்றும் போது, மெயின் (Maine) மற்றும் நெபராஃச்கா (Nebraska ) என்ற இரண்டு மாநிலங்கள் மட்டும் Split Electoral Votes என்ற வேறு முறையைப் பின்பற்றுகிறது.

"பகிர்வு முறை எலக்டரல் ஓட்டுகள்" ( Split Electoral Votes) எப்படி நடைமுறைப் படுத்தப்படுகிறது இந்த மாநிலங்களில்?

இது கொஞ்சம் சிக்கலானது. உதாரணத்திற்கு  'நெபராஃச்கா' (Nebraska ) மாநிலத்தை மட்டும் எடுத்துக்கொள்வோம். இந்த மாநிலத்திற்கு என்று நிர்ணயிக்கப்பட்ட‌ மொத்த‌ எலக்டர் (எலக்டரல் ஓட்டுகள்) எண்ணிக்கை 5.

ஒரு உதாரணத்திற்கு , இங்கே நடக்கும் அதிபர் தேர்தலில் , ரிபப்ளிகன் கட்சி "900,000" வாக்குகளையும் (பாப்புலர் ஒட்டுகள்) டெமாக்ரடிக் கட்சி "600,000" வாக்குகளையும் (பாப்புலர் ஒட்டுகள்), பெறுவதாகக் கொள்வோம்.  இதன்படி 'மாநில பாப்புலர்' ஓட்டுகளின் அடிப்படையில் "ரிபப்ளிகன் கட்சி" வெற்றி பெற்றதாகிறது. மற்ற மாநிலம் போல "வெற்றி பெற்றவருக்கே அனைத்தும்" ( winner-takes-all system ) என்று இருந்திருந்தால் , இந்த மாநிலத்தின் 5 எலக்டரல் ஓட்டுகளும் , இந்தக் கட்சிக்கே கொடுக்கப்பட்டு இருக்கும். ஆனால், அப்படி செய்யாமல் இந்த மாநிலம் மேலும் ஒரு உட்கட்ட பகிர்வு ( Split Electoral Votes) ) அரசியலைச் செய்கிறது.

இந்த மாநிலத்திற்கான 5 எலக்டரல் ஓட்டுகள் என்பது, அந்த மாநிலத்திற்கான‌ 2 செனட் பதவி மற்றும் 3 கங்கிரச‌னல் பதவிகள் இரண்டையும் கூட்டி 5 என்று வரையறுக்கப்பட்டது.

இந்த முறையில் மாநில முழுமைக்குமான பாப்புலர் ஓட்டுகளின் அடிப்படையில் , வெற்றி பெற்ற "ரிபப்ளிகன் கட்சி" அந்த 5 எலக்டர்களில் , 2 எலக்டரை (2 செனட் பதவிகளின் இடம்) பெற்றுவிடும்.

மீதியுள்ள 3 எலக்டர்களை, ஒட்டுமொத்த மாநிலத்தின் பாப்புலர் ஓட்டுகளை கணக்கில் கொள்ளாமல், அந்த மாநிலத்தில் உள்ள  3 'கங்கிரச‌னல் தொகுதிகளில்' ஒவ்வொரு தொகுதியிலும் எந்தக் கட்சி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளதோ அவர்களுக்கு கொடுப்பார்கள்.

வாங்க தமிழ்நாட்டில் அமெரிக்க அதிபர் தேர்தலை நடத்தலாம்

இந்தக் குழப்பமான நடைமுறையை நமக்கு அதிகம் பழகிப்போன, டீக்கடைகளிலும் அரசமர பஞ்சாயத்துகளிலும் விவாதிக்கப்பட்ட , நாம் எல்லாம் ஓரளவு தெரிந்து வைத்துள்ள, இந்தியத் தேர்தல் முறையையும் சொல்லி அதன் வழியாக‌ விளக்கலாம்.

உதாரணத்திற்கு இந்த 2016 அமெரிக்க அதிபர் தேர்தல் தமிழ்நாட்டிலும் நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

ஆம் தமிழ்நாடு 51 ஆவது மாநிலமாக அமெரிக்காவுடன் 'அம்மா' புண்ணியத்தில் சேர்ந்துவிடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அதே சமயம் நமது 'தாத்தா', ஏற்கனவே இருக்கும் தொகுதிகளின் வரையறையை அப்படியே வைத்துக்கொள்ள வேண்டும் என்று  உட்கட்சி தீர்மானம் போடுகிறார். அந்த உட்கட்சி தீர்மானத்தை , அண்ணன் 'பன்னீர்' அவர்களிடம், 'தளபதி' கொடுத்து, அவரும் அதை அம்பேரிக்காவிற்கு கடிதமாக 'அம்மா' சொன்னதாக சொல்லிவிடுகிறார்.

 ஏற்கனவே ஃகிளாரி கிளிண்டனால ஆடிப் போய் இருக்கும் அண்ணன் ட்ரம்பும்  இன்னொரு அம்மாவை சமாளிக்க முடியாது என்று , பார்காமலேயே எல்லா விதிகளுக்கும் ஒத்துக்கொள்கிறார். இப்படியாக நம் தமிழகமும் 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் பங்கெடுக்கிறது.

மிழ்நாட்டில் 39 மக்களவை எம்.பி தொகுதிகள் (Lok Sabha - மக்களவை) உள்ளது. இதை அமெரிக்காவிற்குச் சமமான‌ கங்கிரசனல் தொகுதிகள் ( congressional districts ) என்று வைத்துக் கொள்வோம்.

தமிழ்நாட்டிற்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள மாநிலங்களவை எம்.பி  (Rajya Sabha -மாநிலங்களவை ) பதவிகள் 18 உள்ளது. இதை அமெரிக்காவிற்குச் சமமான‌ 'செனட்' பதவிகள் என்று வைத்துக்கொள்வோம்.

ஆக மொத்தம் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட எலக்டரல் (electoral college ) ஓட்டுகள் 39+18=57

தமிழ்நாட்டில் நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் , வாக்குகள் எண்ணப்பட்டு , டெமாக்ரடிக் கட்சி "10,000,000" வாக்குகளையும், ரிபப்ளிகன் கட்சி "8,000,000" வாக்குகளையும் பெறுவதாகக் கொள்வோம்.இதன்படி ,இப்போதுபாப்புலர் ஓட்டுகள் (மக்கள் நேரடியாக செலுத்திய வாக்கு) அடிப்படையில் தமிழகத்தில் 'டெமாக்ரடிக் கட்சி' வெற்றி பெற்றுவிடுகிறது.

தமிழ்நாடு "வெற்றி பெற்றவருக்கே அனைத்தும்" ( winner-takes-all system ) என்ற கணக்கைப் பின்பற்றினால் சனநாயகம் செத்துவிடும் என்று அண்ணன் 'வைகோ' , கன்னியாகுமரி முதல் மதுரை வரை நடந்து, அழகிரியின் சபையில் கால்சிலம்பை உடைக்கிறார்.

வைகோவின் இந்தப் பஞ்சாயத்துகளில் அதிகம் நேரம் செலவழிக்க முடியாது என்று 'அம்மா' முடிவு செய்து ,  Rule 110 அறிக்கையாக‌ , அப்போலோ மருத்துவமனை வழியாக ஒரு அறிக்கை விடுகிறார்.

இதுதான் அந்த அறிக்கை. "அமெரிக்காவின் 'மெயின்' (Maine) மற்றும்  'நெபராஃச்கா' (Nebraska ) மாநிலங்கள் மட்டும் என்ன செல்லப்பிள்ளைகளா?  தமிழகமும்  ,"பகிர்வு முறை எலக்டரல் ஓட்டுகள்" ( Split Electoral Votes)   முறையைப் பின்பற்றும்" . இப்படி சொல்லி வைகோ உட்பட பல மாங்கனிகளை பறிக்கிறார் அம்மா.

மருத்துவமனை வாசலிலேயே கவர்னர் உட்பட அனைவரும் இருப்பதால், அது உடனடி சட்டமாகி அப்போதே அமலாக்கம் செய்யப்படுகிறது.  இது தவறு என்று சொன்ன சுசாமிக்கு மருத்துவமனை அருகே உள்ள திடீர் கோவிலில் வேப்பிலை ஆட்டங்கள் காண்பிக்கப்படுகிறது.

இதன்படி தமிழ்நாட்டில் இருந்து, இரண்டு கட்சிகளும் கீழ்க்கண்டவாறு எலக்டரல் ஓட்டுகளை, அய்யா நல்லக்கண்ணு தலைமையில் பிரித்துக் கொடுக்ககிறார்கள்.

பாப்புலர் ஓட்டுகள் அடிப்படையில் மாநில அளவில் வென்ற 'டெமாக்ரடிக் கட்சி'க்கு  18 எலக்டரல் ஓட்டுகள் வழங்கபடும்.

மீதம் உள்ள 39 எலக்டரல் ஓட்டுகள், எந்த எம்.பி தொகுதியில் யார் அதிகம் ஓட்டுகளைப் பெற்றுள்ளார்களோ அவர்களுக்கு வழங்கப்படும். 'திண்டுக்கல்' எம்.பி தொகுதியை மட்டும் கணக்கில் கொள்ளும்போது அந்தப் பகுதியில் 'ரிபப்ளிகன்' கட்சியானது 'டெமாக்ரடிக்' கட்சியைவிட அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது என்று வைத்துக்கொள்வோம். இந்த மீதமுள்ள 39 எலக்டரில், ஒரு இடத்தை திண்டுக்கல் சார்பாக 'ரிபப்ளிகன் கட்சி' பெற்றுவிடும்.

அப்படி 39 எம்.பி தொகுதிகளை தனித்தனியாக பார்க்கும் போது , 30 எம்.பி தொகுதிகளில் 'ரிபப்ளிகன் கட்சி' யும் , 9 எம்.பி தொகுதிகளில் 'டெமாக்ரடிக் கட்சி' யும் முன்னணி வாக்கைப் பெற்று இருப்பதால் , கீழ்க்கண்டவாறு எலக்டரல் ஓட்டுகள் பிரிக்கப்படும்.

தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட எலக்டரல் (electoral college ) ஓட்டுகள் 39+18=57

(1) மாநில அளவில் பாப்புலர் ஓட்டின் மூலம் வெற்றி பெற்ற 'டெமாக்ரடிக் கட்சி'க்கு 18 ஓட்டுகள்.

(2) 9 எம்.பி தொகுதிகளில் முன்னணியில் வந்தமைக்காக அந்த தொகுதி மக்களின் தீர்ப்பிற்கு கட்டுப்பட்டு  'டெமாக்ரடிக் கட்சி'க்கு அந்த 9 எலக்டரல் ஓட்டுகள்.

(3) மாநில அளவில் தோற்றாலும், 30 எம்.பி தொகுதிகளில் முன்னணியில் வந்தமைக்காக, அந்த தொகுதி மக்களின் தீர்ப்பிற்கு கட்டுப்பட்டு,  'ரிபப்ளிகன் கட்சி' க்கு 30 எலக்டரல் ஓட்டுகள்.

தமிழக மாநில அரசு கட்சிகளுக்கு ஒதுக்கும் எலக்டரல் ஓட்டுகளின் முடிவான எலக்டரல் ஓட்டுகள் எண்ணிக்கை.

டெமாக்ரடிக் கட்சிக்கான எலக்டரல் (electoral college ) ஓட்டுகள்=  18+9=27
ரிபப்ளிகன் கட்சிக்கான எலக்டரல் (electoral college ) ஓட்டுகள்=  30

இதுவே தமிழகமும் அமெரிக்காவில் உள்ள மற்ற 48 மாநிலங்கள் போல "வெற்றி பெற்றவருக்கே அனைத்தும்" ( winner-takes-all system ) என்ற முறையைப் பின்பற்றி இருந்திருக்குமேயானால்  டெமாக்ரடிக் கட்சியே அந்த 57 எலக்டரல் (electoral college ) ஓட்டுகளையும் பெற்று , ரிபப்ளிகன் கட்சிக்கு ஒன்றும் இல்லாமல் போய் இருக்கும். ஆனால் , குழப்பமானதாக இருந்தாலும் இப்படி பிரித்துக் கொடுக்கும் முறையால் , மாநிலத்திற்குள் இருக்கும் தொகுதிகள் சார்பான மக்களின் உரிமைக்கு முக்கியத்துவம் கிடைக்கிற‌து.

கொஞ்சம் இருங்கள்....
சற்றுமுன் கிடைத்த தகவலின்படி , அய்யா 'மோடி' அவர்கள் தமிழகம் அமெரிக்காவுடன் சேர்ந்ததை அவரின் அமெரிக்க பயணத்தில் அறிந்து கொள்கிறார். அவசரமாக அது செல்லாது என்று அர்னாபை விட்டு, தொலைக்காட்சியில் அலறவிடுகிறார். இருக்கும் ஆசுபத்திரி தொல்லைகளில் , இந்த சத்தம் தேவையா என்று, அம்மா தமிழகத்தை மறுபடியும் இந்தியாவோடு சேர்த்துவிடுகிறார். எனவே நாம் மறுபடியும் அமெரிக்காவிற்கு வருவோம்.

ப்படியாக அமெரிக்காவில் ஒவ்வொரு மாநிலமும் அவர்களுக்கான எலக்டர்களை  (electoral college ) மக்களின் நேரடி அதிபர் ஓட்டுமூலம் தேர்ந்தெடுத்து வைத்துக்கொள்கிறது.

ஒரு மாநிலத்தில் இரண்டு கட்சிகளுமே சரி சமமான அள‌வில் பாப்புலர் வாக்குகளைப் பெற்றுவிட்டால் ( end in a tie vote) என்னாகும்?

"வெற்றி பெற்றவருக்கே அனைத்தும்" ( winner-takes-all system ) என்ற முறையைக் கடைபிடிக்கும் மாநிலத்தில் இப்படி நடக்க அதிக வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் , எந்தக் கட்சிக்கு எலக்டரல் (electoral college ) ஓட்டுகளை கொடுப்பது என்பது சிக்கலாகிவிடும். இப்படியான சமயங்களில், மறு எண்ணிக்கை, நீதிமன்ற வழக்கு , மறு தேர்தல் என்று ஏதேனும் ஒன்றை , மாநில அரசு அதன் சட்டவிதிகளின்படி தேர்ந்தெடுக்க முழு உரிமை உண்டு.

ஒரு வேளை மறு தேர்தலிலும் இரண்டு கட்சிகளுமே சரி சமமான அள‌வில் பாப்புலர் வாக்குகளைப் பெற்றுவிட்டால் என்னாகும்? எதுவுமே வேலைக்காது என்று முடிவான பிறகு, அந்த மாநிலத்தில் உள்ள அப்போதைய அரசு (கவர்னர் ,மாநில செனட் மற்றும் மாநில காங்கிரஃச்) எலக்டர்களை நியமிக்கும் அதிகாரத்தைப் பெறலாம். மாநில அளவில் அப்படி இதுவரை நடந்தது இல்லை.

2000 ஆண்டு ஃபுளோரிடாவில் அப்படி என்னதான் நடந்தது?

2000 ஆண்டுக்கான அமெரிக்க அதிபர் தேர்தலில் ஃபுளோரிடாவில் ஒரு பெரிய கட்டப் பஞ்சாயத்து நடந்தது. வழக்கு ,வாய்தா,மறு எண்ணிக்கை என்று ஒரு மாதத்திற்கும் மேலாக பஞ்சாயத்துகள் நடந்தது. இறுதியாக நடந்த மறுவாக்கு எண்ணிக்கையின் முடிவில்,   ரிபப்ளிகன் கட்சி   ( George W. Bush ) 2,912,790 பாப்புலர் வாக்குகளும் , டெமாக்ரடிக் கட்சி (Al Gore ) 2,912,253 பாப்புலர் வாக்குகளும் பெற்று அவர்களுக்கிடையேயான ஓட்டு வித்திசாயம் வெறும் 537 என்று இருந்தது.  இறுதியில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு , ரிபப்ளிகன் கட்சி ( George W. Bush ) வேட்பாளருக்கே 25 எலக்டரல் ஓட்டுகளையும் அந்த மாநிலம் வழங்க வேண்டும் என்று நாட்டமை தீர்ப்பாகி, அதன் மூலமே அண்ணன் புஃச் ( George W. Bush ) அமெரிக்காவின் 43 ஆவது அதிபரானார்.

இந்த எலக்டர்கள் எப்போது? எப்படி? வாக்களித்து அதிபரை தேர்ந்தெடுப்பார்கள்.....தொடரும்.

தொடர்பான பதிவுகள்
அமெரிக்கா அதிபர் தேர்தல் 2016 : களத்தில் உள்ளவர்களும் 12 ஆவது சட்ட பிற்சேர்க்கையும்
http://kalvetu.balloonmama.net/2016/10/2016-12.html

அமெரிக்காவில் அதிபரைத் தேர்ந்தெடுப்பது மக்கள் அல்ல. மாநிலங்களால் நியமிக்கப்படும் எலக்டர் என்பவர்களே!
http://kalvetu.balloonmama.net/2016/10/blog-post_18.html

அமெரிக்காவில் அதிபர் தேர்தல்: யார் இந்த எலக்டர்கள் (Electoral College) ?
http://kalvetu.balloonmama.net/2016/10/electoral-college.html

No comments:

Post a Comment