Friday, December 03, 2021

ஆட்டுக்கார அலமேலும் அந்த ஆடும்: ரசினி என்ற நரி

"இதுதான் படத்தில் நடித்த ஆடு" என்று ஒரு ஆட்டை அழைத்து வந்தார்கள். எங்கள் ஊரில் இருந்த ஒரே தியேட்டர் "அசந்தா" தியேட்டர் மட்டுமே. "இன்று இப்படம் கடைசி" என்று இருக்கும் போசுட்டரில் குறுக்காக பட்டை ஒட்டிய காலம் அது.

மதுரை டவுனில் படம் ஓடி, ஃபிலிம் தேய்ந்தபிறகே எங்கள் ஊருக்கு வரும். இரண்டு வாரங்கள் தாண்டி ஓடினாலே அது எங்கள் ஊரில் "சில்வர் சூப்ளி".

இந்தப்படம் ஒரு மாதம் ஓடியது என்று நினைக்கிறேன். அப்போது, நான் எனது குண்டியின் பின்புறம் தெரியும் வண்ணம் "சன்னல்" வைத்த அரை டவுசரில் இருந்த காலம் என்று நினைக்கிறேன். என் சகாக்களும் அப்படியே. வேளாண்மை குடோனில் இருந்த சிமெண்ட் சறுக்கில், சறுக்கி சறுக்கியே எங்கள் டவுசரில் இயற்கையாகவே பின்னால் சன்னல் வந்திருக்கும். எங்கள் பெண் தோழிகள் அதையெல்லாம் கண்டுகொள்வதே இல்லை. சன்னல் வைத்த எங்கள் டவுசர்களுக்கு அவர்கள்  பழகி இருந்தார்கள்.

அன்று அந்த ஆட்டை மேள தாளங்களுடன் ஒவ்வொருதெருவாக அழைத்து வந்தார்கள்.எனது அம்மாகூட அந்த ஆடு அலமேலுவைக் காத்த கதையைச் சொல்லிச் சொல்லி மாய்ந்து கொண்டிருப்பார். அலமேலு வந்திருந்தால்கூட அவ்வளவு கூட்டம் கூடியிருக்குமா என்று தெரியாது. அவ்வளவு கூட்டம்.

ஆடு மதுரை திரும்பும் வரை என் போன்ற சன்னல் வைத்த டவுசர்கள் அதன்பின்னால் சுத்திக் கொண்டிருந்தோம். சந்தடி சாக்கில் ஆட்டின் கொம்பைத் தொட்ட ஒருவன் (முனியாண்டி என்று நினைக்கிறேன்) பேமசாகிவிட்டான். அடுத்தநாள் பள்ளியில் , பல பெண்கள் தங்கள் அழுக்குப் பாவாடையில் வைத்து காக்காய்கடி கடித்த கம்மர்கட்டை அவனுடன் பகிர்ந்தார்கள். சுமதி அவனுக்கு கொடுக்கவில்லை என்பது எனக்கு திருப்தி. அப்படிக் கொடுத்திருந்தால் அடுத்த நாள் அவளின் சைக்கிள் கடையில் அவளுக்காக நிற்கக்கூடாது என்று நினைத்து இருந்தேன்.

தியேட்டரில் கடலைமிட்டாய் விற்கும் அண்ணன் ஒருத்தன் எங்கள் பக்கத்து வீட்டுக்காரன். அவனுக்கு ஆட்டின் பின்னால் போகும் பாக்கியம் கிடைத்தது மதுரவரை.

சில வாரங்களுக்குப்பின் அவனிடம் , "எண்னே , இப்ப அந்த ஆடு எங்க இருக்கு? மெட்ராசுக்கு நடிக்கப் போயிருச்சா? என்றேன். "போடா வெண்ணை , அது அன்னிக்கே மிளகரணைப் பிரிவில் பிரியாணியாயிருச்சு" என்றான். மருத போகும் இடத்தில், 'குமாரம்' தாண்டி 'மிளகரணை'ப் பிரிவில் அதை பிரியாணியாக்கிட்டார்களாம்.

சாராயம் பிரியாணி என்று அலமேலுவின் ஆட்டைத் தின்று செரித்து விட்டார்கள்.

"அய்யோ! அப்போ அது சினிமா ஆடு இல்லையா? புதுப்பட்டித் தியேட்டருக்கு என்ன பண்ணுவாங்க?" என்றேன்.

"டிஃச்டிரிபூட்டர் வாடிப்பட்டி சந்தைல புது ஆடு வாங்கித்தருவார் அவுகளுக்கு. அதுவும் படம் ஒருவாரத்துக்கு மேலயாவது ஓடினாத்தான்" என்று சொன்னான் அந்த அண்ணன்.
**

காலம் முழுக்க சினிமா ஆடுகள் தெருவுக்கு வந்து போகிறது. ஆடுகளாவது பிரியாணியாகும். இந்த நரிகளால் என்ன பயன்?

நல்ல வேளை காந்தி செத்துட்டார். "எதற்கெடுத்தாலும் சாப்டாமா அழிச்சாட்டியம் உண்ணாவிரதம் செய்தா நாடு கெட்டுப்போயிடும்" என்று ஆன்மீகம் குருத்து சொல்லிருக்கும்.

G+ Post 05/30/2018

No comments:

Post a Comment