Friday, May 12, 2006

விஜயகாந்தால் செய்ய முடிந்தது பா.ம.க வால் முடியுமா?


தேர்தல் அலசல்1:
விஜயகாந்தால் செய்ய முடிந்தது பா.ம.க- வால் முடியுமா?

நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் அனைவராலும் ஆச்சர்யமாகப் பார்க்கப் படுபவர் கேப்டன் விஜயகாந்த்.சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்லும் பா.ம.க நிறுவனர் கூட்டணி வைத்து இருப்பது அன்று வந்த "பராசக்தி" முதல் நேற்று வந்த "கண்ணம்மா" வரை திரைப்படத்திற்கு வசனம் எழுதும் ஒரு மூத்த, சினிமாத்துறையுடன் பலகாலம் தொடர்பு உள்ள கலைஞர் கருணாநிதியுடன்.அது போல, அதே கூட்டணியில் நெப்போலியன் , சந்திரசேகர் போன்ற பல சினிமாத் தலைகள் உண்டு.சினிமாத்துறையில் உள்ளவர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டே விஜயகாந்தை அவரது துறையைக் காட்டி விமர்சித்தது சந்தர்ப்பவாதம். அதன் பலனை இப்போது அவர் அறுவடை செய்கிறார்.

ஜெயலிதாவுடன் பா.ம.க கூட்டணி வைத்த காலங்களில் ஜெயலிதாவும் அரிதாரம் பூசிய ஒரு முன்னாள் நடிகை என்பதை வசதியாக மறந்து விட்டு "அரிதாரம்" பூசியவர்கள் அரசியலுக்கு வரலாமா? என்று கேட்பது இவர்களால் மட்டுமே முடியும்.என்னதான் கூட்டணி வென்றாலும், மாம்பழத்தில் ஒரு உள்ள "கரு வண்டு" போல் விஜயகாந்தின் வெற்றி பா.ம.க வை உறுத்தத்தான் செய்யும்.அதுவும் பா.ம.க விருத்தாச்சலத்தை ஒரு மானப் பிரச்சனையாக கருதியது என்று கார்த்திக் தேவருக்கு கூடத்(?) தெரியும்.

சினிமா என்பது ஒரு கலை. அதற்காக கல்லூரியும் அரசின் விருதுகளும் உண்டு.மருத்துவத்துறையை தவறாகப் பயன்படுத்தும் மருத்துவர்கள்போல் இந்த சினிமாத்துறையிலும் அதை தவறாகப் பயன்படுத்துபவர்கள் உண்டு.இது எல்லாத் துறையிலும் இருக்கத்தான் செய்கிறது. சினிமாவை முக்கியமாகக் கருதி பா.ம.க நடத்திய போராட்டங்கள், அவர்கள் விஜயகாந்தை விமர்சித்த விதம் இவைகள்தான் விஜயகாந்தை இந்த விருத்தாச்சலத்தில் (பா.ம.க கோட்டை) நிற்க வைத்து வெற்றியையும் கொடுத்திருக்கிறது.

சினிமாக் கவர்ச்சி மட்டும்தான் விஜயகாந்தின் வெற்றிக்கு காரணம் என்று இவர்கள் சொல்வது தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வது.சினிமாவில் இருந்து வந்த அனைவரும் அரசியலில் சாதிக்கவில்லை. M.G.R க்கு அடுத்து வந்த சிவாஜி,பாக்யராஜ், விஜய ராஜேந்தர் போன்ற அனைவரும் அரசியலில் நிற்க முடியவில்லை.விருத்தாச்சலத்தில் விஜயகாந்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் பா.ம.க முன்னிறுத்திய சாதீயம் மற்றும் அந்தப் பகுதி மக்கள் விரும்பிய மாற்றம்.விருத்தாசலத்தில் பா.ம.க விஜயகாந்திற்கு எதிராக செய்த தேர்தல் சித்து விளையாட்டுகள் அதிகம்.அதையும் மீறி விஜயகாந்த் வெற்றி பெற்று இருப்பது பா.ம.க விற்கு ஒரு எச்சரிக்கைதான்.

பா.ம.க சினிமாவிற்கு எதிரான போக்கை விட்டு விட்டு, ஆக்கப்பூர்வமான போராட்டங்களிலும், உண்மையான மக்கள் தொண்டிலும் தன்னை இணைத்துக் கொள்ளாதவரை அவர்கள் கூட்டணியுடனேயே வாழவேண்டியதுதான். தனது இன மக்களுக்குச் சலுகைகளை மட்டும் பெற்றுத் தறுவதே அந்தக் கட்சியின் நோக்கம் என்றால் ஏதும் புதிதாகச் செய்யத்தேவை இல்லை.உண்மையில் நல்ல மாற்று அரசியல் கட்சியாக இருக்க வேண்டும் என்றால் முதலில் தனது கோட்டையில் வெற்றி பெற்ற தனது எதிரிக்கு வாழ்த்துச் சொல்லி அவரைப் பாரட்டுவதே நல்லது.தனது இன மக்களுக்காக சிந்திப்பவர் மருத்துவர் இராமதாஸ் என்றால் அதே மக்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதியுடன் சேர்ந்து உழைக்கத் தயங்கக் கூடாது.

எல்லா அரசியல் தலைவர்களைப் போலவே கல்லூரித் தொழில்,குடும்ப அரசியல்,தேர்தல் கால இலவச அறிவிப்புகள் என்று சகலத்துடன் வந்து களம் இறஙகியிருக்கும் விஜயகாந்த்தினை தமிழகக் காவல் தெய்வமாக நினைக்கவும் முடியாது. வரும் காலங்களில் இவரும் பழைய மொந்தையில் புது கள்ளாக மாறிவிடலாம்.

சினிமாவில் எல்லாம் சாத்தியம். நிஜத்தில் பல அரசியல் தடைகள் உண்டு.விஜயகாந்த் வெற்றி பெற்றாலும் அந்தப் பகுதி மக்களுக்கு ஒரு நலல பிரதிநிதியாக இருக்க வேண்டும். இவருக்கு இது முதல் அனுபவம் என்பதால் இவரை இப்போது விமர்சிக்க விரும்பவில்லை.தமிழகத்தையே திரும்பிப்பார்க்க வைதத விஜயகாந்திற்கு வாழ்த்துகள். விஜயகாந்த் விருத்தாச்சலத்தில் தோற்று இருந்தால் கூட பா.ம.க வை அதன் தொகுதியிலேயே சந்திக்க நினைத்த தைரியத்தை பாராட்டித்தான் இருப்பேன். ஏனென்றால்....

பா.ம.க வின் நிறுவனரோ அல்லது அக்கட்சியில் உள்ள யாரேனும் ஒரு முக்கியப் பிரமுகரோ எந்தக் கூட்டணித் துணையும் இல்லாமல், தனியாக தென் மாவட்டங்களில் உள்ள தொகுதியில் எதேனும் ஒன்றில் நின்று ஜெயிக்க முடியாது.தனியாக தென் மாட்டங்களில் நிற்பதற்கே இவர்களால் யோசிக்க முடியாது.வட மாவட்டங்களில் மட்டுமே இவர்களுக்கு செல்வாக்கும், ஆதரவும் உள்ளது.அதிலும் கூட இவர்களின் முக்கிய பலம் கூட்டணி.கூட்டணி இல்லாமல் எப்படி பார்வட் பிளாக்கால் ஆண்டிபட்டி உசிலம்பட்டியில் (தேவர் இனம் அதிகம் உள்ள பகுதி) கூட வெற்றி பெற முடியவில்லயோ அது போல் பா.ம.க வாலும் வட மாவட்டங்களில் இந்த அளவு வெற்றி பெற முடியாது.

தனது வெற்றி மாம்பழங்களை எப்படி மக்களுக்கு பயன்படும் வகையில் விருந்து வைக்கிறதோ அதைப் பொறுத்தே வரும் காலங்களில் பா.ம.க வின் அரசியல் வாழ்க்கை இருக்கும். இல்லை என்றால் விஜயகாந்தை நோக்கி மக்கள் போவதை தவிர்ப்பது சிரமமே.

****************


****************

2 comments:

  1. ---பா.ம.க வின் நிறுவனரோ அல்லது அக்கட்சியில் உள்ள யாரேனும் ஒரு முக்கியப் பிரமுகரோ எந்தக் கூட்டணித் துணையும் இல்லாமல்---

    இராமதாஸோ, அன்புமணியோ இதுவரை தேர்தலில் நின்றதில்லையே?

    ---வரும் காலங்களில் இவரும் பழைய மொந்தையில் புது கள்ளாக---

    காராம்பசு, அரிசி எல்லாம் இலவசம் அறிவித்தபோதே கலாச்சாரத்தில் ஊறித்தான் திளைத்தார். ஆனால், தடாலடியாக ஓவர் நைட் மாற்றம் எல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம்; லோக் பரித்ரான் மாதிரி சில வாக்குகளை மட்டும் பெற்று துவண்டு விடுவதற்கு பதில், அவரின் வெற்றிக்கான வழி ஓரளவு நியாயமானதுதானே... :-)

    ReplyDelete