Wednesday, May 31, 2006

தமிழக முதல்வர் அவர்களுக்கு

தேதி: ஜூன் 1, 2006

அன்பும் பெருமதிப்பிற்கும் உரிய தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம்,


தாய் மொழித் தமிழை செந்தமிழ் அரியணையில் அமர்த்திய நீங்கள் ஐந்தாவது முறையாக தமிழக ஆட்சிப் பொறுப்பில் அமர்வதற்கு வாழ்த்துகள்.நீங்கள் இதுவரை போட்ட சட்டங்களிலே எனக்கு மிகவும் பிடித்தது, கட்டாய தமிழ்ப் பாடம். இதற்காக உங்களை எவ்வளவு வாழ்த்தினாலும் தகும். நீங்கள் செய்யாமல் யார் இதனைச் செய்வது. யாரும் நீதிமன்றம் சென்று தடை ஏதும் வாங்கிவிடாமல் சட்டப்படி இதனை அமுல்படுத்த உங்களின் தன்னம்பிக்கை துணை இருக்கட்டும்.

இந்த நேரத்தில் நான் உங்களுக்கு இந்தக் கோரிக்கையை வைக்க விரும்புகிறேன்.

சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களின் அறியாமையாலும், நடுத்தர மக்களின் அறியாமை மற்றும் அவர்களின் நிர்ணயிக்கப்பட்ட சொற்ப வருமானம் போன்ற பல்வேறு காரணங்களாலும் உதாசீனப் படுத்தப்பட்ட,சரியாக கவனிக்கப்படாத இந்த விசயத்தை உங்களின் பார்வைக்கு கொண்டுவர விரும்புகிறேன்.தாத்தாவாகிய நீங்கள் உங்களின் பேரப்பிள்ளைகளுக்கு செய்தே ஆக வேண்டிய செயல் இது.

பெண்களின் பூப்பெய்தும் வயது, அவர்கள் 8 ஆம் வகுப்பு படிக்கும் போதே ஆரம்பித்து விடுகிறது. பல காரணங்களால் சில பெண்குழந்தைகளுக்கு இது இன்னும் முன்னரே ஆரம்பித்து விடுகிறது.அப்போது ஆரம்பிக்கும் இந்த இயற்கை மாற்றம், அவர்களுக்குப் பல சுகாதாரச் சாவல்களை Menopause காலம் வரை கொடுக்கிறது. இந்தக் காலகட்டத்திற்குள் அவர்களின் சிரமங்கள், பெண்கள் மட்டுமே அறிந்த ஒன்று.

பெண்களின் உடலில் ஏற்படும் இந்த மாற்றமும், அதனால் வரும் சுகாதாரச் சாவல்களும் இதுவரை விரிவாக விவாதிக்கப்பட்டது இல்லை. மதம், மொழி, கலாசாரம்,பொருளாதாரம் போன்ற விசயங்கள் ஒரு பெண்ணின் வெளித் தோற்றம், உடை, அலங்காரம் போன்றவைகளை வேண்டுமானால் மாற்றலாம். இவை எல்லாவற்றையும் தாண்டிஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையானது ஒன்று இருக்கிறது. நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு தேவைப்படும் இந்தப் பொருளுக்கு விலை கொஞ்சம் அதிகம் தான்.

அது தான் சானிடரி நாப்கின்.

AIDS மற்றும் ஆணுறை சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு ஓரளவு மக்களிடம் ஏற்பட்டுள்ளது என்றே நினைக்கிறேன்.ஆனால், சானிடரி நாப்கின் பயன்படுத்தும் விசயத்தில் இதுவரை அப்படி ஒருவிழிப்புணர்வு வந்ததாகத் தெரியவில்லை.இது பெண்கள் மட்டும் சம்பந்தப்பட்ட விசயமாதலால் ஒருவேளை அதிகம் கவனிக்கப்படாமல் இருக்கலாம்.அல்லது, அரசும் சுகாதாரத்துறையும் ஏற்கனவே செய்துவரும் நல்ல செயல்கள் இதுவரை விளம்பரப் படுத்தப்படாமல் இருக்கலாம்.


பெண்கள் சானிடரி நாப்கின் பயன்படுத்தாமல் இருக்கக் காரணங்கள்

முக்கியமான காரணம் அதன் விலை.

இது சாதாரண மற்றும் நடுத்தர மக்களுக்கு இன்றும் எட்டாத விலையிலேயே உள்ளது.சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் மக்கள் ஒரு பாக்கெட் ரூபாய் 50 அல்லது 100 என்ற விலையில் விற்கும் ஒரு பொருளை நினைத்துப் பார்க்க முடியாது.அடிப்படைச் சுகாதாரப் பொருளான இது,ஆடம்பரப் பொருளாக சாதாரண மக்களுக்கு ஒரு கனவுப் பொருளாகவே உள்ளது.இந்த விலையினால் அதுபற்றி அறிந்த நகர்ப்புறப் பெண்கள்கூட சாதரண பழையதுணிகளையே நம்பி உள்ளனர்.

நான் அறிந்தவரை சானிடரி நாப்கின்களை பன்னாட்டு நிறுவனங்கள், பெரிய நிறுவங்கள் தான் செய்கின்றன.மதுரைக்கு அருகில், பெண்கள் சுய உதவிக்குழு ஒன்று குறைந்த விலைக்கு biodegradable மூலப்பொருள் கொண்டு நாப்கின் செய்து வியாபாரத்திற்குக் கொண்டு வந்துள்ளதாக கேள்விப்பட்டேன்.

பழைய துணிகளைப் பயன்படுத்துவதில் உள்ள பிரச்சனைகள்

நடுத்தர மக்கள்
இவர்கள் பழைய துணிகளைப் பயன்படுத்தினாலும்,சமூகத்தில் இன்னும் இது ஒரு தீண்டத்தகாத செயலாகப் பாவிக்கப்படுவதால், அவர்களால் தங்களின் சொந்த வீட்டில்கூட இதனைப் பகிரங்கமாக தோய்க்கவோ, உலர்த்தவோ முடியாது.அப்படியே இவர்கள் பயன்படுத்தினாலும், முடிவில் அதனைச் சுகாதரமான முறையில் dispose செய்ய வழி கிடையாது.

ஏழைகள்
சாப்பாட்டுக்கே கஷ்டப்படும், இரண்டு அல்லது மூன்று புடவைகள் மட்டுமே இருக்கும் வீடுகளில் மாதா மாதம் சுத்தமான துணி கிடைப்பது சாத்தியமில்லை. இவர்கள் கையில் கிடைத்த துணியைப் பயன் படுத்துகிறார்கள். இவர்களில் சிலர், தரையை துடைக்க வைத்திருக்கும் துணியையே உபயோகிக்கிறார்கள்.சிலர் மிக நைந்து போன பழைய துணியை உபயோகிக்கிறார்கள்.ஒரு வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள் இருந்தால், அதே துணி தான் அனைவருக்கும்!

இதனால் வரும் பிரச்சனைகள்

இவர்களின் பழக்கத்தை அறிந்திருக்கும் கிராம மருத்துவர்கள் இப்பெண்கள் கர்ப்பமானால், அல்லது கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுடன் மருத்துவரிடம் வந்தால் அவர்களைச் சரியாகவே பரிசோதிப்பதில்லை. அப்பெண்களின் சுகாதரக் கேடான பழக்க வழக்கத்தினால் பரிசோதிக்க விருப்பமில்லாமல் மேலேழுந்தவாரியாக பார்த்து விட்டு அனுப்பி விடுகிறார்கள்.இதனால் இவர்களின் உடல் நலம் மேலும் மோசமாகிறது. இதனால் ஒரு பெண்ணுக்கு வரும் உடல் உபாதைகள், மன அழுத்தம், சுகாதாரக் கேடு போன்றவைகளைச் சொல்லவே வேண்டாம்.

இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக நான் முன்வைக்கும் யோசனைகள்

1.பள்ளியில் பெண்குழந்தைகளுக்கு அவர்கள் அந்தப் பருவத்திற்கு வரும் முன்னரே இது பற்றிய போதனை செய்வது.

2.பெண் ஆசிரியர்கள் முதலில் இதனைப்பற்றிப் பேசி குழந்தைகளின் கூச்சத்தைப் போக்கச் செய்வது.

3.பள்ளியில் பெண்குழந்தைகளுக்கு இலவசமாக/குறைந்த விலையில் அரசே மாதத்திற்கு ஒருமுறை தேவையான அளவு சானிடரி நாப்கின்கள் கொடுப்பது.

4.மகளிர் சுய உதவிக் குழுக்கள் அல்லது சுகாதரத்துறை போன்ற பொதுத்துறையின் மூலம் அனைத்து கிராமப் பெண்களுக்கு இலவசமாக/குறைந்த விலையில் சானிடரி நாப்கின்கள் கொடுப்பது.

5.நகர்ப்புறங்களிலும் வசதிக்குறைவால் விலை கொடுத்து வாங்க முடியாத பெண்களுக்கு சுகாதாரத்துறை மூலம் இலவசமாக/குறைந்த விலையில் சானிடரி நாப்கின்கள் கொடுப்பது.

6.இது பற்றிய விழிப்புணர்வை ஊடகங்கள் மூலம் மக்கள் மத்தியில் உண்டாக்குவது.

(கூடுவஞ்சேரி ஊராட்சியில் சானிட்டரி நாப்கின் தயாரிப்பை கிராமப் பெண்களே செய்கின்றனர். (Panchayat : KaduvancheriBlock : SriperumbudurDistrict : Kancheepuram.) அதிக விவரங்களுக்கு http://ddws.nic.in/rev_tamil_04.pdf

அனைவருக்கும் அறிமுகமான ஜனாதிபதி பரிசு பெற்ற கீரப்பாளையம் என்ற ஊர் இந்த விசயத்தில் முதன்மை பெறுகிறது. அது பற்றிய case study http://ddws.nic.in/casestudy_keeraplayam.pdf )

7.தாலுகா, மாவட்ட அளவில் அரசாங்கமே இவ்வாறு தொழிற்சாலைகளை அமைத்தால் வேலை வாய்ப்புடன் பெண்களின் சுகாதாரப் பிரச்சனைக்கும் நல்ல தீர்வு கிடைக்கும்.

ஆணுறை,AIDS,குடும்பக் கட்டுப்பாடு போன்று அரசே இதனை முன்னின்று செய்தால்தான் நல்லது.

நீங்கள் இந்த விசயத்தில் ஆவண செய்தால், வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் பல பள்ளிக் குழந்தைகளும், அறியாமையால் பல வியாதிகளுக்கு ஆளாகும் ஏழைப் பெண்களும்,பண வசதிக் காரணங்களால் அவதிப்படும் நடுத்தர,மத்திய வர்க்கத்துப் பெண்களும் உங்களை வாழ் நாள் முழுவதும் வாழ்த்தப் போவது நிச்சயம்.

இது சம்பந்தமாக ஏற்கனவே உள்ள திட்டங்கள்:

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு "சானிடரி நாப்கின் தயாரிக்கும் தொழிற்சாலை" திட்டத்தினை தமிழக அரசு ஏற்கனவே RURAL DEVELOPMENT DEPARTMENT ANNOUNCEMENTS 2004-2005 -ல் அறிவித்துள்ளது.மேலும் Total Sanitation Campaign (TSC) என்று 25 க்கும் மேற்பட்ட சிறந்த பல திட்டங்களை வடிவமைத்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு:
http://www.tn.gov.in/policynotes/archives/policy2005-06/performance_budget/pb-social-2004-05.pdf
http://www.tn.gov.in/policynotes/archives/announcement/rural2004-05.htm

ஆனால் இது அனைத்து கிராமங்களையும் சென்று அடைந்ததாத் தெரியவில்லை.மேலும் இது பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லை.

அனைத்துப் பெண்களுக்கும் தேவையான இந்த சுகாதாரம் கிடைக்க தாங்கள் ஆவண செய்ய வேண்டுமாய் விண்ணப்பித்துக் கொள்கிறேன்.


நன்றிகளுடன்,

http://kalvetu.blogspot.com

இந்த நேரத்தில், இந்தக் கடிதம் எழுத உந்துதலாக இருந்த "ரம்யா நாகேஸ்வரன்" (http://ramyanags.blogspot.com/2005/09/blog-post_12.html) அவர்களுக்கும்,இந்த சமூகத்தொண்டில்ஏற்கனவே தன்னை அர்ப்பணித்துள்ள Anshu K. Gupta - Founder- Director, GOONJ.அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

email sent to : cmcell@tn.gov.in , cmcell@tn.nic.in

CCed to Chief Secretary cs@tn.gov.in , Social Welfare and Nutritious Meal Programme DepartmentEmail swsec@tn.gov.in , Health and Family Welfare Department hfsec@tn.gov.in , Union Minister for Health & Family Welfare hfm@alpha.nic.in , Kumudam Weekly Tamil magazine kumudam@hotmail.com

email informations are obtained from http://www.tn.gov.in and http://rajyasabha.nic.in/