Tuesday, May 23, 2006

இட ஒதுக்கீடு: நாய்கள்தான் அப்படி நாமளுமா?

பக்கத்தில் இருக்கும் படத்தில் இந்தப் பையன் சொல்ல வரும் கருத்து என்ன? ஒதுக்கீட்டில் வருபவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்றா?சில சமயம் இந்த சமுதாயத்தைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அல்லது எனக்குத்தான் சிந்தனை மழுங்கிவிட்டதா?இருக்கலாம்.இட ஒதுக்கீட்டிற்கு எதிராக நடக்கும் போராட்டங்களைப் பார்த்தால் எனக்கு ஒன்று தெளிவாகத் தெரிகிறது.மனிதன் என்ன படித்து, எத்தனை பெரிய பதவியில் இருந்தாலும் அவனின் நாய்க்குணம் மாறுவதில்லை. தெரு நாய்கள் அந்த தெருவுக்குள் புதிய நாய்கள் வந்தால், அட அதுவும் நம்ம ஆள்தானே வந்து போகட்டும் , என்று விட்டுவிடுவதில்லை. அவைகள் கடுமையான போரில் இறங்கும்.இது நாய்க்கு மட்டும் இல்லை. மனிதன் உட்பட அனைத்து விலங்குகளுக்கும் உள்ள ஒரு பொதுவான குணம்.உலகில் மனிதன் முதன் முதலில் நாயைப் பார்த்த காலத்தில் இருந்து இன்றுவரை நாய் நாயாகவே இருக்கிறது. என்னதான் வீட்டு நாய்க்கு சொக்காய் போட்டு அழகு பார்த்தாலும் நாயின் குணம் மாறுவது இல்லை.

மனிதன் அப்படி இல்லை.தனது பகுத்தறிவினால எத்தனையோ மாற்றங்களைக் கண்டு, இன்று மற்ற விலங்கினங்களில் இருந்து வித்தியாசப் பட்டு இருக்கிறான்.ஆனால், அவனுக்கு அவனையும் அறியாமல் இந்த நாய்க்குணம் பல நேரங்களில் வந்து விடும்.

நீங்க எப்பவாவது பதிவு செய்யாமல், பொதுவான இரயில் பொட்டியில் பயணம் செய்து இருக்கீங்களா? அங்க இந்த மாதிரி எல்லாக் கூத்தையும் பார்க்கலாம். சென்னையில் இருந்து இரயில் கன்னியாகுமரி வரை போகுதுன்னு வைங்க.இந்தப் பொட்டியில் பயணம் செய்யும் நம்ம மகா சனங்கள் தனக்கு ஒண்ட இடம் கிடைத்தால் போதும், அடுத்து வரும் நிலையத்தில் ஏறக்கூடிய சக பயணியைப் பற்றிக் கண்டுக்கவே மாட்டாங்க. என்னமோ அவுங்கள வேண்டா வெறுப்பா உள்ள சேத்துக்குவாங்க. இப்படி உள்ளே வந்த ஆசாமியும் அதே மாதிரி குணத்தை அதற்கடுத்த நிலையத்தில் வரும் பயணியிடம் காட்டுவான். இது இப்படியே தொடரும்.அதனாலதான் இதற்கு தொடர் வண்டி என்று பெயர். இதில் கொடுமை என்னவென்றால் சில சமயம் அந்த பொட்டிக் கதவையே பூட்டிவிட்டு படுத்துருவாங்க. என்னதான் தட்டுனாலும் தூங்குறமாதிரி படுத்துக்கிட்டு திறக்க அடம் பிடிப்பாங்க.அடுத்த நிலையத்தில் ஏறும் பயணி, புள்ளை குட்டிகளோட கதவைப் போட்டுத் தட்டுவான்... இது ஒரு தொடர்கதை...


அதே மாதிரிதான் இந்தக் கல்வி,வேலை சம்பந்தப்பட்ட இட ஒதுக்கீடும். இங்க இப்ப நடக்குற கூத்த மட்டும் பாப்போம்.

  • மனிதன் என்பவன் படிப்பதால் வரும் அறிவுக்குப் பெயர் படிப்பறிவு(கல்வியறிவு).
  • பல விசயங்களைக் கேட்பதால் வரும் அறிவு கேள்வியறிவு.
  • தானே தனது அனுபவத்தில் இருந்து அறியும் அறிவு பட்டறிவு.

இவை அனைத்தையும் தாண்டி Common sense அப்படீன்னு ஒன்று இருக்கு. தமிழில் இதை பகுத்தறிவுன்னு சொல்லலாமா? இது என்னன்னா படித்த,கேட்ட மற்றும் அனுபவித்த எல்லாத்தையும் சீர்தூக்கிப் பார்த்து,இங்கே , இப்போது எது தேவை,எது சரி என்று தனது சொந்தப் புத்தியால் சிந்திக்க வேண்டும். இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் அனைத்து அறிவாளிகளும் அவ்வாறு செய்கிறார்களா என்று தெரியவில்லை.அப்படிச் செய்தால் இப்படிப் பேசமாட்டார்கள்.இதுவரையில் நான் படித்த அனைத்து எதிர்ப்பாளர்களின் கருத்துகளும் ஒரே மாதிரியாக இருக்கிறது.

அவர்கள் சொல்லும் முக்கியமான காரணங்கள்....


உதாரணத்திற்கு கரண் தாபரின் கேள்விகள்:
http://www.ibnlive.com/news/decision-on-quota-is-final-arjun/11063-4-single.html

//the NSSO is correct in pointing out that already 23.5 per cent of the college seats are with the OBC, then you don't have a
case in terms of need.//

//For example, a study done by the IITs themselves shows that 50 per cent of the IIT seats for the SCs and STs remain vacant and for the remaining 50 per cent, 25 per cent are thecandidates, who even after six years fail to get their degrees. So,clearly, in their case, reservations are not working.//


கரணின் கேள்விகளையும் மற்ற எதிர்ப்பாளர்களின் கேள்வியையும் தொகுத்தால் நமக்கு கிடைப்பது

  • இட ஒதுக்கீட்டில் கொடுப்பதால் கல்வியின் தரம் குறையும்.
  • ஏற்கனவே SC/ST பிரிவுகளில் உள்ள இடங்கள் காலியாக உள்ளன.
  • அப்படியே படித்தாலும் SC/ST மாணவர்கள் கல்வியை முடிப்பதில்லை.
  • ஏற்கனவே OBC க்கு 23.5 சதவீதம் உள்ளது இன்னும் எதற்கு?

இந்த கரண், இட ஒதுக்கீட்டை எதிர்த்துப் போராடும் மாணவர்களிடம் ஏன் போராடுகிறீர்கள் என்று கேட்டு,OBC பக்கம் இருக்கும் எதாவது நியாத்தை பட்டியலிட்டு இருந்தால் யாரவது சொல்லவும்.கரணின் பார்வையில், இட ஒதுக்கீட்டுக்கான தேவையே இல்லை, நாடு கல்வியறிவில் சமத்துவமாக எல்லாத் தரப்பினரையும் சென்று அடைகிறது. செய்ய வேண்டியது எல்லாம் செய்தாகி விட்டது. இன்னும் எதற்கு என்ற தொனியே இருகிறது. இட ஒதுக்கீடு கேட்பவர்களிடம் ஒரு நியாமும் இல்லை, என்ற கருத்தும் மறைமுகமாக முன் வைக்கப்படுகிறது.

இப்படி இவரின் செய்தியை மட்டுமே படிப்பவர்களுக்கு இவர் சொல்வதெல்லாம் சரி என்றே படும். உண்மை அதுவல்ல.


இவரின் குற்றச் சாட்டுகளுக்குப் பதில் அளிக்கும் முன் மற்ற சில அடிப்படைக் கேள்விகளைப் பார்க்கலாம்.

  1. சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு தேவையா?
  2. சாதி அடிப்படையில் இருக்கும் போது மத அடிப்படையிலும் இட ஒதுக்கீடு வேண்டுமா?
  3. பொருளாதார அடிப்படையில் இருந்தால் என்ன குறைச்சல்?

இப்படி பல கேள்விகளை அடுக்கலாம்.எல்லாம் ஒரே கோணத்தில் இருந்து பார்க்கும் போது சரியாகவும், வேறு இடத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு கேணத்தனமாகவும் இருக்கும்.எந்த முறையை எடுத்துக் கொண்டாலும் அதற்கு சாதக, பாதகங்கள் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாதது. அரசியல் கட்சிகள் எல்லாம் குப்பையாக இருந்தாலும் எப்படி நாம், நல்ல குப்பையாக தேர்ந்தெடுக்கிறோமோ அது போலத்தான் இதுவும். இருப்பதில் ஒரு முறையை கையாளவேண்டும்.அந்த முறை அனைவருக்கும் பயன்படும் வண்ணம் செயல் படுத்தப் படவேண்டும்.

இந்தியாவில் இந்தியர்கள் இருக்கும் வரை சாதியும் மதமும் இருக்கப் போகிறது. நாம் என்ன சீனர்களா?( பார்க்க1 பார்க்க2 )சாதி மதத்தை குப்பையில் போட்டு விட்டு, வேறு உருப்படியான வேலையைப் பார்க்க.அட போங்க சார்.

இப்போது,இங்கே உள்ள சூழ்நிலையில் சாதி அடிப்படை இட ஒதுக்கீடு இன்னும் தேவை.இன்னும் எவ்வளவு காலத்துக்கு தேவை என்றால் ஒதுக்கப்பட்ட SC/ST எல்லாம் நிரம்பி,அதில் சேர்ந்த மாணவர்கள் எல்லாம் பட்டம் பெற்று வரும் வரை.இப்போது எதிர்ப்பாளர்களின் கேள்விகளுக்குப் போவோம்.


இட ஒதுக்கீட்டில் கல்வியை கொடுப்பதால் கல்வியின் தரம் குறையும்.

இதுதான் Common sense இல்லாமல் கேட்கப்படும் கேள்வி வகை. எல்லாரும் சொல்கிறார்கள் என்று அனைவரும் சொல்லும் Stereo type விவாதம். இதை விரிவாகப் பார்ப்போம். உதாரணமாக IIT ஐ எடுத்துக் கொள்வோம். அங்கு சேரும் வரைக்குத்தான் இட ஒதுக்கீடு. அதாவது சேருவதற்குத்தான் இட ஒதுக்கீடு. சேர்ந்தபின் அனைத்து மாணவர்களும் (Irrespective of the quota they used to join) ஒரே பாடத்திட்டத்தையும் ,ஒரே தேர்வு முறையையும்தான் சந்திக்கிறார்கள். இந்த முறையில் தேர்ச்சி பெற்று வருபவர்கள் எப்படி தரத்தில் குறைய முடியும்.

இட ஒதுக்கீடு என்பது வாய்புகளற்ற மாணவனுக்கு களம் அமைத்துக் கொடுப்பதோடு முடிவடைகிறது. அவனின் படிப்புக்கும் ,அவனது தேர்ச்சிக்கும் அது உதவுவது இல்லை. கொட்டாம்பட்டி கண்மாயில் நன்றாக நீச்சல் அடிக்கும் ஒருவனுக்கு,நீச்சல் போட்டியில் கலந்து கொள்ள சலுகை செய்கிறது அரசு அவ்வளவே. அந்தப் போட்டியில் அவன்தான் நீச்சல் அடிக்கப் போகிறான்.அங்கே அவன் எல்லா தரப்பு ஆட்களுடன் ஒரே களத்தில் ஒரே விதியின் கீழ் விளையாடப் போகிறான். இங்கே எப்படி தரம் குறையும். புரிந்தால் சொல்லுங்கள்.


ஏற்கனவே SC/ST பிரிவுகளில் உள்ள இடங்கள் காலியாக உள்ளன.

சொல்வதற்கு வெட்கமாய் இல்லை? அரசு அறிவித்த சலுகைகள் இன்னும் சரியாக மக்களுக்குச் சேரவில்லை என்றுதானே அர்த்தம். இந்த இடங்களுக்கு SC/ST மாணவர்களை நிரப்ப அந்த கல்லூரி என்ன செய்தது? பள்ளிகளுக்கு பசங்கள் வரவில்லை என்றதும்,அவர்கள் ஏன் வரவில்லை?அவர்களைத் தடுப்பது எது? என்றெல்லாம் சிந்தித்து, அதனை அரசுக்குத் தெரியப்படுத்தாமல், SC/ST மாணவர்களுக்காக எந்த சுய முயற்சியும் எடுக்காமல், இபோது குற்றம் சொல்லும் இவர்கள் இந்த நாள் வரை என்ன செய்து கொண்டு இருந்தார்கள்?

கல்வி என்பது சமுதாயத்திற்கு பயன்படுவதாய் இருக்க வேண்டும். IIT ல் படித்தவன் NASA வில் வேலை பார்க்கிறான் என்று சொல்லுவதுதான் பெருமை என்றால் அந்தப் பெருமை எனக்குத் தேவை இல்லை.இங்குள்ள SC/ST இடங்கள் போதவில்லை இன்னும் ஒதுக்கீடு செய்யுங்கள் ,மாணவர்களின் விண்ணப்பம் குவிகிறது, என்று ஒரு IIT சொல்லும் நாள் வருமேயானால் ,அப்போதுதான் அதை நல்ல சமுதாய கல்வி நிறுவனமாகக் கருதுவேன்.


அப்படியே படித்தாலும் SC/ST மாணவர்கள் கல்வியை முடிப்பதில்லை.

நீ என்ன செய்தாய்? அவர்கள் முன்னேற வேண்டும் என்றுதானே சலுகை கொடுத்து அனுப்பினோம்.அவர்களுக்கு தனிப்பட்ட கவனம் கொடுத்தால் நீ என்ன குறைந்தாய் போவாய்.SC/CT மாணவர்களுக்கு அதிகப்படியாக சொல்லிக் கொடுக்க வேண்டியுள்ளது. அரசே! இன்னும் நிதியையும் ஆசிரியர்களையும் ஒதுக்கு என்று எந்த IIT யாவது குரல் கொடுத்து இருக்கிறதா? இல்லை உண்ணாவிரதம் இருந்திருகிறதா? சமுதாய அக்கறை இல்லை உங்களுக்கு. குற்றம் சொல்லும் அனைவரும் சேர்ந்து உதவ வேண்டும். அரசு மட்டும் சட்டத்தால் இதனை சாதித்து விட முடியாது.

ஏற்கனவே OBC க்கு 23.5 சதவீதம் உள்ளது இன்னும் எதற்கு?

புள்ளி விவரங்கள் தேவைதான். ஆனால் இது IIT போன்ற கல்வி நிலையங்களில் OBC க்கு 23.5 சதவீதம் இல்லை என்றே நினைக்கிறேன்.தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.அப்படியே புள்ளி விவரங்களில் தவறு என்றால் அரசு அது பற்றி தெளிவான அறிக்கையை வெளியிட்டு குழப்பத்திற்கு முடிவு கட்ட வேண்டும்.

இட ஒதுக்கீடு சம்பந்தமாக...

'வெச்சா குடுமி, சரைச்சா மொட்டை' - மத்திய அரசு

இட ஒதுக்கீடு வேண்டும்! ஏனென்றால்

இட ஒதுக்கீடு - அச்சு ஊடகங்கள் நச்சு ஊடகங்களா?

இட ஒதுக்கீடு பற்றிய கவரேஜ்

இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக! விண்ணப்பம்

5 comments:

  1. தெளிவான கருத்துக்கள். தேவையான பதிவு.

    ReplyDelete
  2. அருமையான பதிவு! இந்தப் பதிவுக்கான தொடுப்பை என் பதிவு ஒன்றிலும் தரப் போகிறேன். :)

    ReplyDelete
  3. இங்கேயும் நாய் தானா?

    ReplyDelete
  4. அன்புள்ள கல்வெட்டு!

    அவர் சொல்ல வரும் சங்கதி என்னன்னா,
    ஒரு நாய் புதுசா வந்தா பரவால்ல.
    ஆனா ஏற்கனவே இருக்கர நாய பாத்து 'நாயே வெளியே போ' ன்னு கத்திகிட்டே வரக்கூடாதுன்னு சொல்றார்.

    Just for Laughs :-)))))

    ReplyDelete
  5. நாய்களை மனிதனோடு ஒப்பிட்டு தரம் தாழ்த்துவதை வன்மையாக கண்டிக்கிறேன். :-)))))

    ReplyDelete