Monday, November 09, 2009

திருப்பரங்குன்றம்- கீதாவின் பதிலுக்கான விளக்கம்

முன் குறிப்பு:
யாருடைய நம்பிக்கைகளையும் மாற்றுவதோ அல்லது கேள்வி கேட்பதோ எனது நோக்கம் அல்ல. திருப்பரங்குன்றம் என்ற பொது இடத்தின் வரலாற்றைக் கேள்வி கேட்கவே நான் முயற்சி செய்கிறேன். அந்த பொது இடத்தின்மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கைகள் உங்களை எதிர்வினையாற்ற வைக்கலாம். நாம் அனைவரும், ஒரு பொது இடத்தின் வரலாற்றை பேச முனைகிறோம். அதைத்தாண்டி எந்தவிதமான உரையாடலுக்குள்ளேயும் நான் போகப்போவது இல்லை. அப்படியே எங்காவது நான் திசைமாறி வேறுவிசயங்களுக்குள் என்றால் அதை தெரியப்படுத்தவும் நீக்கிவிடுகிறேன்.

நேரடியாக 1,2,3...என்று கேள்விகளையும் ,பதிலையும் மட்டும் எழுதுவோம். இது கேள்விகள் கிளைபரப்பாமல் எடுத்துக் கொண்ட பொருளில் மட்டும் உரையாட வசதியாய் இருக்கும்.

******
கீதா,
நீங்கள் எத்தனை முறை திருப்பரங்குன்றம் கோவிலுக்குப் போய் இருப்பீர்கள் என்று தெரியாது. அதில் எத்தனைமுறைகள் அதன் வரலாற்றை அர்ச்சகரிடம் கேட்டு இருப்பீர்கள் என்றும் தெரியாது. குறைந்தபட்சம் இந்த முறை நீங்கள் கேட்க முயற்சித்து உள்ளீர்கள். இன்னும் தொடர்ந்தால் உங்களுக்கும் பல புதிய கோணங்கள் தெரியவரலாம்.

இனி கேள்வி/பதில்/விளக்கங்கள்....


எனது கேள்வி:
(1). 5 கேரக்டர்களுக்கான ஒரு பொதுக் கோவில் ,எப்படி ஒருவருக்கான கோவிலாக உருமாறியது?

உங்கள் பதில்:
1.ஐந்து காரக்டர்களுக்கான பொதுக்கோயில் இது அல்ல. திருமணத்துக்கு வருகை புரிந்தவர்கள் இடம் பெற்றிருப்பதால் அவர்கள் முக்கியத்துவம் குறைக்காமலேயே எல்லாவித வழிபாடுகளும் நடைபெறுகிறது. இன்னும் சொல்லப் போனால் மற்றக் கோயில்களின் இறை உருவங்கள் ஃபோகஸ் செய்யப் பட்ட வெளிச்சத்தில் பிரகாசிக்க, இங்கேயோ, தீப ஒளியிலேயே குறைவின்றித் தரிசனம் செய்ய முடிகின்றது.

எனது விளக்கம்:
நீங்கள் எடுத்த எடுப்பிலேயே இது ஐந்து காரக்டர்களுக்கான பொதுக்கோயில் இது அல்ல என்று சொல்லிவிட்டீர்கள். இதற்கு மேல் என சொல்வது?

ஒரு கோவில் என்றால் அதில் ஒரு மூலவர் இருப்பார். அவர் இருக்கும் இடம் கருவறை என்று சொல்லப்படும். பார்க்க வந்தவர், கல்யாணத்திற்கு வந்தவர்,கோபுரம் கட்ட காசு கொடுத்தவர் யாராக இருந்தாலும் மூலவர் அந்தஸ்தில் சிலை வைக்க மாட்டார்கள். வந்தவர்கள் போனவர்களுக்கு கருவறைகு வெளியில் சிலைகள் இருக்கலாம். (ஒரு உதாரணம்: மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோவில் : பெயரிலும் இருவரும் அறியப்படுகிறார்கள். இருவருக்கும் தனித்தனி கருவறை உண்டு. கல்யாணத்திற்கு வந்தவர் போனவர் எல்லாம் இங்கும் உண்டு.)

திருப்பரங்குன்றம் 5 கேரக்டர்கள் சம அந்தஸ்தில் இருக்கும் இடம். மாம்பழம்,பலா,வாழை,ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு பழங்கள் உள்ள ஒரு கடையை பழக்கடை என்றுதான் சொல்ல வேண்டும். அதை 'பலா'க்கடை என்றுதான் சொல்வேன் என்றால். அது உங்கள் விருப்பம்.

எனது கேள்வி:
(2.) தல புராணங்கள் எந்தக் காலத்தில் திருத்தப்பட்டது?

உங்கள் பதில்:
2.தல புராணங்கள் அனைத்தும் திருப்பித் திருப்பிக் கூறுவது ஒரே விஷயத்தையே! மாறுதல் ஏதும் செய்யப் படவில்லை. கோயில் அர்ச்சகரும் இதே தான் கூறினார்.

எனது விளக்கம்:
5 கேரக்டர்கள் சம அந்தஸ்தில் இருக்கும் ஒரு இடம் முருகனுக்கு மட்டுமான ஒரு கோவிலாக கட்டமைக்கப்பட்டது எப்படி? இந்த தலம் முருகனுக்கானது மட்டும் அல்ல, 5 பேருக்கும் உரியது. கருவறை அமைப்பே அதற்கு சாட்சி.

தற்போது முருகன் கோவிலாக (மத்தவர்கள் எல்லாம் கல்யாணத்திற்கு வந்தவர்கள்) அறியப்படும் இந்த இடத்திற்கு வேறு கோணமும் இருக்கலாம் என்று சந்தேகிக்கும் பட்சத்திலேயே அதற்கான தேடல் தொடங்கும். மாறுதல் ஏதும் செய்யப்படவில்லை என்று நம்பும் போது அர்ச்சகர் என்ன , தேங்காய் விற்கும் கடைக்காரன் சொன்னாலும் ஏற்றுக் கொள்வீர்கள்.

பக்கவாட்டு குறிப்பு:
கேள்விகள் 1 , 2 ற்கான பதில்கள் உங்களின் நம்பிக்கைகள் சார்ந்து அமைந்துவிட்டது. உங்களிடம் மேற்கொண்டு இந்த 1,2 சம்பந்தமாக உரையாடுவது உங்களின் நம்பிக்கைகளை நான் நேரடியாக கேள்வி கேட்கும் சூழலில் கொண்டுவிடும். நான் அதை தவிர்க்க விரும்புகிறேன். நீங்கள் விரும்பினால் மட்டுமே 1,2 ல் தொடர விருப்பம்.

எனது கேள்வி:
(3.) இது முருகனுக்கான ஆறுபடை வீடுகளில் முதல் வீடாக ஏன் கட்டமைக்கப்பட்டது ?

உங்கள் பதில்:
3.முதல் படை வீடு ஆனதுக்கு விரிவான காரணம் எழுதி விட்டேன்.

எனது விளக்கம்:
நீங்கள் சொல்லிய காரணங்களை பல முறை படித்துப்பார்த்தேன்.கீழே உள்ள காரணங்களால்தான்,திருப்பரங்குன்றம் முதல் படைவீடாக இருக்கிறது என்று சொல்கிறீர்கள். சரியா? தவறு என்றால் திருத்தவும்.

1.படைவீடு என்பது பகைவரோடு போர் புரியும் ஒருவன் தன்
படைகளோடு தங்கி இருக்கும் இடத்தின் பெயர் ஆகும்.

2.மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி,ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களில் முதன்மையான மூலாதாரத்தைக் குறிப்பதே திருப்பரங்குன்றம் ஆகும். திருப்பரங்குன்றம் முதல் படை வீடாக அமைந்த காரணமும் இது தான் மூலாதாரம் என்பதே.

3.முருகன் திரு விளையாடல்களில் முதன்மையானது (சூரனை வதம் செய்யும் முன்னரே) பிரணவப் பொருளை உரைத்ததே என்பதை அனைவரும் அறிவர். அந்தப் பிரணவ மந்திரத்தைத் தான் முறையான வழியில் அறிந்து கொள்ளாமல், இறைவன், இறைவிக்குச் சொல்லும்போது தற்செயலாய்க் கேட்க நேர்ந்தாலும்,குருவின்றி பெறும் உபதேசம், பயனற்றது, என்பதை உணர்த்தவே, இங்கு வந்து இறை வடிவான மலையிலேயே தவம் இயற்றினார். ஆகவே அவர் தம் திருவிளையாடல்களில் முதன்மையான ஒன்று, ஆதாரமான ஒன்று, மூலாதாரமான ஒன்று முதல் படை வீடானது பொருத்தமே அல்லவா?

மேலதிகக் கேள்விகள்:
1.போர் சம்பந்தமான காரணத்தினால் இது முதல் படைவீடாடக ( படைகளோடு தங்கி இருக்கும் இடத்தின்) அறியப்படுகிறது என்றால், இங்கே நடந்த போர், மற்ற 5 இடங்களில் நடந்த போருக்கு எல்லாம் முந்தைய ஒன்று. சரியா?

ஆறு இடங்களில்லும் நடந்த போர்களில் முருகன் எதிர் கொண்ட எதிரிகளின் பெயர் ,இடம் ,காலம் பட்டியல் உள்ளதா? அப்படி இருந்தால், முதன் முதலில் நடந்த போரின் போது முருகன் தன் படைகளோடு தங்கி இருந்த இடம் ஆதலால் இது முதல் படைவீடு என்று சொல்லலாம்.

2.சூரனை வதம் செய்யும் முன்னரே பிரணவப் பொருள் சமாச்சாரம் திருப்பரங்குன்றத்திற்கு வந்துவிட்டது என்று நீங்களே சொல்கிறீர்கள். எனவே பகைவரோடு போர் புரியும் ஒருவன் தன் படைகளோடு தங்கி இருக்கும் இடத்தின் பெயர் படைவீடு என்ற விளக்கமும், இது முதல் போரில் தங்கியிருந்த இடம் என்ற விளக்கம் ஒத்துவராது. //ஆகவே அவர் தம் திருவிளையாடல்களில் முதன்மையான ஒன்று, ஆதாரமான ஒன்று, மூலாதாரமான ஒன்று முதல் படை வீடானது பொருத்தமே அல்லவா?// கதாகலாட்சேபம் பாணியில் நீங்களே "அல்லவா" என்று கேட்டுக் கொண்டால் "அல்ல" என்றுதான் நான் சொல்ல முடியும்.

3.இடையில் "மூலாதார" கணக்கு வேறு சொல்கிறீர்கள். மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களில் முதன்மையான மூலாதாரத்தைக் குறிப்பதே திருப்பரங்குன்றம்.

  • எந்த வகையில் திருப்பரங்குன்றம் மூலாதாரத்தை குறிக்கிறது?
  • மூலாதாரம் என்றால் என்ன?
  • மூலாதாரத்திற்கு ஏன் திருப்பரங்குன்றம் பொருத்தமானது?
ஆறுபடை வீடுகளின் வரிசை ...

(அ) திருவிளையாடல் படி வரிசைப்படுத்தப்படுகிறதா? அல்லது
(ஆ) போர் புரிந்த காலங்களில் முருகனின் படைகள் தங்கியிருந்த கால வரிசையில் வரிசைப்படுத்தப்படுகிறதா? அல்லது
(இ) ஆதாரங்கள் (மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை) வரிசையில் வரிசைப்படுத்தப்படுகிறதா? அல்லது
(ஈ) மேலே சொன்ன மூன்றுமா ? அல்லது
(உ) எப்படி வேண்டுமானாலுமா?

நீங்கள் இப்படித்தான் என்று சொல்லி அந்த வரிசையில் ஆறு படைவீடுகளையும் ஆதாரங்களுடன் வரிசைப்படுத்தினால் நல்லது. உ.ம்: நீங்கள் போர் வரிசை என்று சொன்னால், இந்த இடத்தில், இந்த வருடத்தில் இந்த பெயர் கொண்ட அசுரனுடன் முருகன் போர் புரிந்தார்? என்று ஆறு வீடுகளையும் வரிசைப் படுத்தலாம்.

அடிக்குறிப்பு:
நீங்கள் 3 வது கேள்விக்கான பதிலையும் உங்களின் நம்பிக்கைகளில் பேரில் வரலாற்று ஆதாரங்கள் இல்லாமல் பதில் சொல்லவிரும்பினால் நான் ஜகா வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை.

சித்திரைத் திருவிழாவில் தொலைந்து போன குழந்தை போல யாரும் முழிப்பீர்களேயானால் பார்க்க எங்களின் பழைய பதிவுகளை
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் - கீதா
http://pathivu.madurainagar.com/2008/01/blog-post_09.html

திருப்பரங்குன்றம் - முருகனும் அவனுக்கு பக்கத்தில் சிலரும் அனைவருக்கும் தெய்வம் என்று பெயர் அல்லது தெற்கே சமணத்தின் நினைவுச்சின்னம்
http://pathivu.madurainagar.com/2007/12/blog-post_10.html

திருப்பரங்குன்றம்- இடமிருந்து வலமாக பவளக்கனிவாய் பெருமாளும் மற்றும் சில தெய்வங்களும்
http://pathivu.madurainagar.com/2007/12/blog-post_06.html